Published : 10 Jul 2021 03:15 AM
Last Updated : 10 Jul 2021 03:15 AM

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் - 24,278 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை : சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

சேலம்

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் மொத்தம் 24 ஆயிரத்து 278 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சேலத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் கார்மேகம் பேசியதாவது:

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்வு காண வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் அதன் உண்மைதன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த ஜூன் 11-ம் தேதி சேலத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் 846 மனுக்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் 145 மனுக்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகநலத்துறையின் கீழ் 9 மனுக்களுக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக சேவைப் பிரிவில் 100 மனுக்களுக்கும் என மொத்தம் 1,100 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 10 பேருக்கு ஆணைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் இதுவரையில் 4 ஆய்வுக்கூட்டங்களுக்கு மேல் நடத்தப்பட்டுள்ளன. மொத்தம் 24 ஆயிரத்து 278 மனுக்கள் வரப்பெற்று அந்தந்த துறை அலுவலர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு மனுக்கள் மீது தீர்வு காண உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் ஷேக் அப்துல் ரஹ்மான், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சத்திய பாலகங்காதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x