Published : 27 Jun 2021 03:15 AM
Last Updated : 27 Jun 2021 03:15 AM
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் விவசாய சங்கத்தினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் நேற்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், இச்சட்டத்துக்கு எதிராக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மத்திய அரசைக் கண்டித்தும், மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியும் திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதேபோல, சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் சிஐடியு ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ராமர், பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அயிலை.சிவசூரியன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இதேபோல, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தொழிற்சங்கங்கள் சார்பில் மாவட்டத் தலைவர்கள் தொமுச ஏ.ரத்தினம், சிஐடியு கே.முகமதலி ஜின்னா, ஏஐடியுசி கே.ஆர்.தர்மராஜன், மாவட்டச் செயலாளர்கள் கி.கணபதி, எ.தர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை அண்ணா சிலை, ஆலங்குடி உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அனைந்திந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தொமுச மாவட்டச் செயலாளர் ஆர்.ரங்கசாமி, அரியலூரில் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் டி.தண்டபாணி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தஞ்சாவூரில் தலைமை அஞ்சலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மாவட்டத் தலைவர் வீரமோகன் தலைமையில், விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, கும்பகோணம், பட்டுக்கோட்டையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.எஸ்.மாசிலாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கச் செயலாளர் தம்புசாமி, தொழிற்சங்கத் தலைவர்கள் குருநாதன், சந்திரசேகர ஆசாத், முருகையன் ஆகியோர் பங்கேற்றனர். திருத்துறைப்பூண்டியில் முன்னாள் எம்எல்ஏ உலகநாதன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, மன்னார்குடியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாகை எம்.பி செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் தங்கமணி, தொமுச மாவட்டச் செயலாளர் அங்காடி சேகர், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT