Published : 18 Jun 2021 03:17 AM
Last Updated : 18 Jun 2021 03:17 AM
கோயில் நகரமான திருச்செந்தூரை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக சிறப்பு கண்காணிப்பு அலுவலர் கோ.பிரகாஷ் நேற்று தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ரூ.10 கோடிக்கு மேலான திட்டப் பணிகளுக்கு சிறப்பு கண்காணிப்பு அலுவலராக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கோ.பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக அவர் தூத்துக்குடியில் முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று அவர்திருச்செந்தூரில் ஆய்வு மேற்கொண்டார். திருச்செந்தூர் நகரில்செயல்படுத்தப்பட உள்ள திட்டப்பணிகள் குறித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் அவரது தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகள், பேரூராட்சி பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தட சாலைப் பணிகள் உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார். பின்னர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் 150 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய வார்டு தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருச்செந்தூர் நகரில் 10 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. தற்போது அமைக்கப்படும் பாதாள சாக்கடை திட்டப் பகுதியில் 5 ஆயிரம் குடியிருப்புகள் வருகின்றன. இதில் 250 குடியிருப்புகளுக்கு மட்டுமே பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகளுக்கு இன்னும் 3 அல்லது 4 மாதங்களுக்குள் இணைப்பு கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பாதாள சாக்கடை திட்டம் மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
பாதாள சாக்கடை திட்டம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு தினமும் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேறும். பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு பகுதியில் 85 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 15 ஏக்கரில் குளம் போல் நீர் நிலையை உருவாக்கி, அதில் பாதாள சாக்கடை திட்டத்தில் வெளியேறும் தண்ணீரை சேமிக்கலாம். மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரையும் சேமிக்க முடியும். இதன் மூலம் அந்த பகுதியில் அடர் வனத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. திருச்செந்தூர், ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை விஞ்ஞான ரீதியாக அழிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய குடிநீர் திட்டம்
திருச்செந்தூருக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்று வழித்தட சாலைகள் வழியாக பக்தர்கள் வருகின்றனர். திருச்செந்தூர் நகருக்குள் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க இந்த மூன்று சாலைகளிலும் பக்தர்கள் தங்கும் விடுதிகளை கட்டதிட்டமிடப்பட்டுள்ளது. குளியலறை, கழிப்பிடம், வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகளுடன் இந்தவிடுதிகளை அமைத்தால் வாகனங்கள் நகருக்குள் வருவதை தடுக்கலாம். இந்த இடங்களில் இருந்து கோயிலுக்கு நகரப் பேருந்துகள் மூலம் பக்தர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும்.
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் யாத்ரிகர் நிவாஸ் விடுதி கட்டும் பணி 6 மாத காலத்தில் முடிவடையும். அதனை அழகான கட்டிடமாக வடிவமைப்பதற்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். இந்த திட்டங்கள் நிறைவேறும் போது திருச்செந்தூர் நகரம் புதுப்பொலிவு பெறும் என்றார்.
ஆய்வின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருத்தஞ் ஜெய் நாராயணன், காவல்துறை ஏஎஸ்பி ஹர்ஷ்சிங், தொழில் வழித்தட சாலை நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், கோட்டப் பொறியாளர் கீதா, திருச்செந்தூர் கோட்டாட்சியர் கோகிலா, வட்டாட்சியர் முருகேசன், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சேதுராமன், திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT