Published : 26 May 2021 03:15 AM
Last Updated : 26 May 2021 03:15 AM

முழு ஊரடங்கையொட்டி திருச்சி மாநகரில் - 1,124 வாகனங்களில் காய்கறி விற்பனை : மாநகராட்சி ஆணையர் தகவல்

திருச்சி

முழு ஊரடங்கையொட்டி, பொதுமக்களுக்கு உதவும் வகையில் திருச்சி மாநகரில் 1,000 தள்ளுவண்டிகள் உட்பட மொத்தம் 1,124 வாகனங்களில் காய்கறி விற்பனை செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் மே 24-ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி, பொதுமக்களுக்கு காய்கறிகள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், விலை உயராமல் தடுக்கவும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை வாகனங்களில் காய்கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்ட மே 24-ம் தேதி 793 வாகனங்களில் காய்கறி விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில், திருச்சி மாநகரில் உள்ள 65 வார்டுகளில் காய்கறி விற்பனை செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை நேற்று அதிகரிக்கப்பட்டது. இதன்படி, திருச்சி மாநகரில் 1,000 தள்ளுவண்டிகள் உட்பட மொத்தம் 1,123 வாகனங்களில் (அரியமங்கலம் கோட்டத்தில் 174, பொன்மலையில் 154, கோ-அபிஷேகபுரத்தில் 124, ரங்கத்தில் 672) காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.

திருச்சி மாநகரில் வார்டு வாரியாக வாகனங்களில் காய்கறி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நபர்களின் விவரங்களை trichycorporation.gov.in என்ற மாநகராட்சி இணையதளத்தில் பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x