Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு - 6 தொகுதிகளில் யாருக்கு வெற்றி? : பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்கு எண்ணிக்கை

தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், வைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதி களிலும் மொத்தம் 69.88 சதவீத வாக்குகள் பதிவாகின. தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து நாளை வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் 3 மேஜைகள் போடப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கைக்காக மொத்தம் சுமார் 250 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று சுழற்சி முறையில் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.

நாளை காலையில் சுழற்சி முறையில் மேஜை வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு மேஜைக்கும் ஒருகண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை முழுவதும் பதிவு செய்து கண்காணிக்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில்தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் முன்னணி நிலவரங் களை ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.

முன்னணி நிலவரங்கள் காலை 10 மணி முதல் வெளிவரத் தொடங்கும். முழுமையான முடிவுகள் வெளிவர நள்ளிரவு வரை ஆகலாம். கரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகம் காரணமாக இம்முறை முழுமையான முடிவுகள் வெளியாக தாமதம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெற்றி பெறப்போவது யார்?

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை 6 எம்எல்ஏ பதவிக்கு மொத்தம் 120 பேர் போட்டியிடுகின்றனர். இதில் அதிகபட்சமாக தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி தொகுதிகளில் தலா 26 பேர் களத்தில் உள்ளனர். வைகுண்டம் தொகுதியில் 21 பேரும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 17 பேரும், விளாத்திகுளம் மற்றும் திருச்செந்தூர் தொகுதிகளில் தலா 15 பேரும் களத்தில் இருக்கின்றனர்.

முக்கிய வேட்பாளர்கள்

இதில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ (கோவில்பட்டி), அமமுகபொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் (கோவில்பட்டி), புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்க.கிருஷ்ணசாமி (ஓட்டப்பிடாரம்), முன்னாள் அமைச்சர்கள் பெ.கீதாஜீவன் (தூத்துக்குடி), அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்), எஸ்.பி.சண்முகநாதன் (வைகுண்டம்) ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். இதில் யார் யாரெல்லாம் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது நாளை தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x