Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நாளை (மே 2) நடைபெறுகிறது.
வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளவாறு இன்று ( மே 1) இரவு 10 மணியில் இருந்து, 3-ம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். வாக்கு எண்ணும் அறைக்குள் தேர்தல் பார்வையாளர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், வாக்குஎண்ணிக்கை கண்காணிப்பாளர்கள், வாக்கு எண்ணும் உதவியாளர்கள், நுண் பார்வையாளர்கள், தேர்தல் பணியாற்றும் பொது ஊழியர்கள், சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் மைய முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
மின் சாதனங்களுக்கு அனுமதியில்லை
வாக்கு எண்ணும் அறைக்குள் செல்போன், ஐ-பேட், மடிக்கணினி உள்ளிட்ட எந்த வகையான மின்னணு சாதனங்களையும் கொண்டு செல்ல தேர்தல் பார்வையாளர்கள் தவிர யாருக்கும் அனுமதியில்லை. எனினும் வாக்கு எண்ணும் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் கணினி பயன்படுத்த வேண்டியதிருந்தால் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும்.பிரையண்ட் நகர் 7-வது தெருவின் வழியாக செல்லும் பிரதான வாயில் வழியாக அரசு அதிகாரிகள், அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவர். சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள், வாக்கு எண்ணும் மைய முகவர்கள் வைகுண்டம் சட்டப்பேரவை தொகுதிக்கு பிரையண்ட் நகர் 8-வது தெரு வழியாக அமைக்கப்பட்டுள்ள நுழைவு வழியை பயன்படுத்த வேண்டும்.
ஓட்டப்பிடாரம் மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதிக்குரியவர்கள் பிரையண்ட் நகர்9-வது தெரு வழியாக செல்லவும்,கோவில்பட்டி தொகுதிக்குரியவர்கள் கணேஷ்நகர் தொடக்கத்தில் உள்ள நுழைவு வழியாகவும், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்குரியவர்கள் கணேஷ்நகர் இறுதியில் உள்ள நுழைவுவாயில் வழியாக செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு
வாகனங்களை அந்தந்த நுழைவு வாயில் அருகே காவல்துறையினர் குறிப்பிடும் இடங்களில் நிறுத்த வேண்டும். வேட்பாளர்கள் மற்றும் அவரது முகவர்கள் வாக்குஎண்ணும் அறைக்கு பேனா, பேப்பர், எழுதுவதற்கான அட்டைமற்றும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி தலைமை அதிகாரியால் வழங்கப்பட்ட படிவம் நகல் (வாக்குச் சாவடியில் பதிவான மொத்த வாக்குகள் விவரம்) ஆகியவற்றை கொண்டு வர அனுமதி உண்டு.சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களால் முகவர் என நியமிக்கப்பட்டு வழங்கப்பட்ட கடிதம் ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் இடத்துக்கு முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்ற சான்றுடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு வரவேண்டும், அல்லது கரோனா தடுப்பூசியை இருமுறை செலுத்தி, அதற்கான ஆவணத்துடன் வரவேண்டும் என்றார் எஸ்பி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT