Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

வாக்கு எண்ணும் மையத்துக்குள் வருவோர்களுக்கு - கரோனா பரிசோதனை, தடுப்பூசி சான்றிதழ்கள் அவசியம் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தகவல்

திருப்பத்தூர்

வாக்கு எண்ணும் மையத்துக்குள் வருவோர் கரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழ் அல்லது 2 தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் வாணியம்பாடி ஜெயின் மகளிர் கல்லூரியில் நாளை காலை எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணுவதற்காக 204 பணியாளர்கள் பணியமர்த் தப்பட்டுள்ளனர்.

காவல் துறையினர், மத்திய பாதுகாப்புப்படையினர், துணை ராணுவத்தினர், பணியாளர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் ஊடகத்துறையினர் கரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழ் அல்லது 2 தடுப்பூசிகளை போட்டு கொண்டதற்கான சான்றிதழை அவசியம் கொண்டு வர வேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வாணியம்பாடி ஜெயின் மகளிர் கல்லூரியில் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. காலை 7 மணிக்கு முன்னதாக அனைவரும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், முகவர்கள், ஊடகத்துறையினர் வந்து செல்ல தனித்தனி வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகு பாதுகாப்பு அறையில் வைக்கப் பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று முடிந்த பிறகும் அதன் முடிவுகள் வெளியிடப்படும். 24 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும். வாக்கு எண்ணும் மையத்துக்குள் வர கரோனா பரிசோதனை அவசியம் என தேர்தல் ஆணையம் அறிவித்ததால் திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 1,257 பேருக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் தற்போது கிடைத்துள்ளது.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வாக்கு எண் ணும் மையத்துக்குள் வர அனுமதியில்லை. அதேபோல, கரோனா பரிசோதனையில் ‘நெகடிவ்’ முடிவு கிடைத்தவர்கள் அதற்கான சான்றிதழ் அல்லது 2 தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால், மையத்துக்குள் வர அனுமதி யில்லை. காய்ச்சல் அறிகுறி இருந்தாலும் அனுமதியில்லை.

வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணி முடியும் வரை வெளியே செல்ல யாருக்கும் அனுமதியில்லை. உணவு, குடிநீர், அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப் பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஊடகத்துறையினருக்கு தனியாக ‘மீடியா அறை’ ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்தபடியே செய்தியா ளர்கள் செய்திகளை சேகரித்துக் கொள்ளலாம்.

அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், முகவர்கள் மையத்துக்குள் ஆங்காங்கே சுற்றிவரக்கூடாது. அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்தபடி வாக்கு எண்ணிக்கையை கண் காணிக்கலாம். செய்தியாளர்களும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

திருப்பத்தூர் எஸ்பி.விஜயகுமார் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர, மத்திய பாதுகாப்புப்படையினர், துணை ராணுவத்தினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளனர். தேர்தல் முடிவுகளையொட்டி வெற்றிக்கொண்டாடங்களுக்கு அனுமதியில்லை என்பதால் பட்டாசு வெடித்தல், ஆரவாரம் செய்தல், கூட்டம் கூடுதல், இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி யாராவது வெற்றிக்கொண்டாட்டங்களை நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’. என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x