Published : 30 Apr 2021 03:14 AM
Last Updated : 30 Apr 2021 03:14 AM

ஆக்சிஜனின்றி நோயாளி இறந்ததாக உறவினர்கள் வாக்குவாதம் : தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பரபரப்பு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் கொள்கலன்களை மருத்துவ குழுவினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, கரோனா நோயாளி இறந்ததாக கூறி, அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 52 வயது பெண், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

`அவருக்கு போதுமான ஆக்சிஜன் அளிக்கப்படவில்லை. அவருக்கு அளிக்கப்பட்ட ஆக்சிஜன் அளவு திடீரென குறைந்தது. இதனாலேயே அவர் உயிரிழந்தார். ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது’ எனக் கூறி, அந்தப் பெண்ணின் உறவினர்கள் மூன்று பேர்,மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையாக ஆக்சிஜன் அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் விளக்கம் அளித்தும், அவர்கள் கேட்கவில்லை. தொடர்ந்து மருத்துவமனை டீன் அறைக்கு சென்று அவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான போலீஸார் அங்கு வந்து, மூவரையும் வெளியேற்றினர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மருத்துவக் குழுவினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள திரவ ஆக்சிஜன் சேமிப்புகொள்கலன்களை ஆய்வு செய்தனர். தேவையான அளவுக்கு ஆக்சிஜன் இருப்பு உள்ளதாக தெரிவித்தனர்.

``இம்மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு நிலவரப்படி 10.06 கேஎல்டி திரவ ஆக்சிஜன் இருந்தது. மேலும், 160 `பி’ வகை ஆக்சிஜன் சிலிண்டர்கள், 97 `டி’ வகை ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பில் உள்ளன. எனவே, ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற பொய்யான தகவலை யாரும் நம்ப வேண்டாம்” என்றார் ஆட்சியர்.

மருத்துவமனை டீன் ரேவதிபாலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மருத்துவமனையில், 1,212 படுக்கைகள் உள்ளன. இதில்700 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில், 550 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன. மீதமுள்ள, 150 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் லைன் கொடுக்கும் பணி நடந்து வருகிறது.

போதுமான ஆக்சிஜன் இருப்பு உள்ளது. 2 நாட்களுக்கு ஒரு முறை இங்குள்ள கொள்கலன்களில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வருகிறது. சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள் போதிய அளவில் உள்ளன. கரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கும் , கரோனா பாதிப்புடைய விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் உயிர் காக்கும் அவசர அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தினசரி சராசரியாக 200 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. தினமும், 3,500 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x