Published : 29 Apr 2021 03:14 AM
Last Updated : 29 Apr 2021 03:14 AM

வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க - 6 பார்வையாளர்கள் நியமனம் : தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 6 ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (ஏப்.29) தூத்துக்குடி வரவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று தெரிவித்தார்.

தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த அவர் கூறியதாவது:

மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கரோனா பெருந்தொற்று காரணமாக ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் முகவர்கள் வருவதற்கு தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வழிகளிலும் எந்தெந்த தொகுதிக்கான வழி என்பதை குறிக்கும் வகையில் போர்டு வைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு வழியிலும் 7 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. தெர்மல் ஸ்கேனர் மூலம் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்.

முகவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் அல்லது தடுப்பூசிபோட்டிருக்க வேண்டும். இதற்கான சான்றும் வைத்திருக்க வேண்டும். அனைவரும் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையில் சுகாதார பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும். ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு மேஜைக்கு மேலேயும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்று முடிவிலும் ஒலிபெருக்கி மூலம் முடிவு அறிவிக்கப்படும்.

6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. விளாத்திகுளம் தொகுதிக்கு அஸ்வானி குமார் சவுதாரி, தூத்துக்குடி தொகுதிக்கு அப்துல் ரஷீத் வார், திருச்செந்தூர் தொகுதிக்கு சுஷில் குமார் பட்டேல், வைகுண்டம் தொகுதிக்கு தேவ் கிருஷ்ணா திவாரி, ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு அனில்குமார், கோவில்பட்டி தொகுதிக்கு சைல்ஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 6 பேரும் இன்று (ஏப்.29) இரவுக்குள் தூத்துக்குடி வந்துவிடுவர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொருமேஜைக்கும் ஒரு நுண்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் வெற்றி விழா ஊர்வலங்களும், ஆரவார கொண்டாட்டங்களும் கூடாது என தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. எனவே, இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும். இதனை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றார் ஆட்சியர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், தூத்துக் குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் கலோன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x