Published : 29 Apr 2021 03:14 AM
Last Updated : 29 Apr 2021 03:14 AM
சிவகளை தொல்லியல் அகழாய்வுப் பணியில் முதன் முறையாக3,000 ஆண்டுகள் பழமையானகல்வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தமிழக தொல்லியல் துறை சார்பில், கடந்த ஆண்டு ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால பானை ஓடுகள், இரும்பு பொருட்கள், பானை கிண்ணங்கள், தமிழ் பிராமிஎழுத்துக்கள், கீறல்கள், குறியீடுகள் என 1,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அடுத்தகட்டமாக, பிப்ரவரி 26-ம்தேதி ஆதிச்சநல்லூர், சிவகளை,கொற்கை ஆகிய மூன்று இடங்களிலும் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. சிவகளையில் அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் தலைமையில் பணி நடைபெற்று வருகிறது. மேலும், விக்டர் ஞானராஜ், பரத்குமார் என இரண்டு தொல்லியல் அலுவலர்கள், 6 ஆய்வு மாணவர்கள், 40-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகளையில் சிவகளை பரம்பு, பேட்மாநகரம், மூலக்கரை ஆகிய மூன்று இடங்களில் 18 குழிகள் அமைக்கப்பட்டு பணி நடைபெறுகிறது. வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்காக சிவகளை செக்கடி, ஆவாரங்காடு திரடு, பொட்டல்கோட்டை திரடு,பராக்கிரபாண்டி திரடு, வெள்ளத்திரடு, பேரூர் திரடு போன்ற இடங்களிலும் விரைவில் அகழாய்வு நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் முதன் முறையாக மூலக்கரை பகுதியில் 10-க்கு 10 என்ற அளவில் 15-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் உள்ளன. ஒரு கல் வட்டம் மட்டும் தோண்டி எடுக்கப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது. இவை, சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற கல்வட்டங்கள் கொடுமணல் பகுதியில் ஏற்கெனவே கிடைத்துள்ளன. சிவகளையில் 29 முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. அதில் மூன்று தாழிகள் முழுமையாக மூடியுடன் காணப்படுகின்றன. இதனால் ஆய்வாளர்கள் உற்சாக மடைந்துள்ளனர்.
`உலக நாகரீகத்தின் தொட்டில்’ என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை 114 ஏக்கரை கையகப்படுத்தி வைத்துள்ளது. அப்பகுதியில் ஆய்வு செய்ய அனுமதி கிடைக்கவில்லை. எனவே, வேலிக்கு வெளியேதான் பணி நடைபெறுகிறது. அதனால் எதிர்பார்த்தபடி எந்த பொருளும் கிடைக்கவில்லை.
``மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் 114 ஏக்கருக்குள் ஆய்வு செய்ய அனுமதி அளித்தால், ஆதிச்சநல்லூர் ஆய்வு அடுத்து கட்டத்துக்கு செல்லும். இதே நிலைமை நீடித்தால் இந்த ஆண்டு ஆதிச்சநல்லூருக்கு ஒதுக்கப்பட்ட பணம் வீணாகிவிடும்” என்றார் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT