Published : 28 Apr 2021 03:14 AM
Last Updated : 28 Apr 2021 03:14 AM

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி - ஆலை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு : ஏடிஜிபி தலைமையில் அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே பாதுகாப்பு பணிக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். (அடுத்த படம்) ஸ்டெர்லைட் ஆலைக்கு வெளியே தண்ணீரை பீச்சியடிக்கும் வாகனம் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபிஜெயந்த் முரளி தலைமையில் காவல் துறை அதிகாரிகள் தூத்துக்குடியில் முகாமிட்டுள்ளனர்.

நாட்டில் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவுவதை தொடர்ந்து ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகள் மிக விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, தூத்துக்குடியில் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக காவல் துறை சட்டம் ஒழுங்குஏடிஜிபி ஜெயந்த் முரளி நேற்று தூத்துக்குடிவந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அன்பு, டிஐஜி பிரவின்குமார் அபிநபு, எஸ்பிக்கள் ஜெயக்குமார் (தூத்துக்குடி), சுகுணா சிங் (தென்காசி), பத்ரி நாராயணன் (குமரி) உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த அதிகாரிகள் அனைவரும் தொடர்ந்து தூத்துக்குடியில் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஆலைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தண்ணீரை பீச்சியடிக்கும் வாகனம், கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வாகனம், தீயணைப்பு வாகனம் போன்றவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், சிப்காட் பகுதி, புறவழிச்சாலை மேம்பாலம் பகுதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏற்கெனவே போராட்டம் நடைபெற்ற பகுதிகள், ஆலையைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகள் மற்றும் மாநகரில் உள்ள முக்கிய பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடி பகுதியில் மட்டும் 600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் நேற்று மாலை வரை போராட்டங்கள் ஏதும் நடைபெறவில்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்புகளை சேர்ந்தவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை எந்த சூழ்நிலையிலும் திறக்க அனுமதிக்கக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுக்களை சேர்ந்தவர்களின் நடவடிக்கைகளை போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x