Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM

பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைபிடித்து - சலூன் கடைகளை திறக்க அனுமதி கிடைக்குமா? : முடிதிருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கை

சலூன் கடைகளை கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் திறக்க அனுமதி கோரி திருநெல்வேலி மற்றும் (2-வது படம்) தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகங்களுக்கு மனு அளிக்க வந்த முடி திருத்தும் தொழிலாளர்கள். (கடைசி படம்) கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். படங்கள்: மு.லெட்சுமி அருண், என்.ராஜேஷ், எஸ்.கோமதி விநாயகம்.

திருநெல்வேலி/தூத்துக்குடி/ கோவில்பட்டி

கரோனா தொற்றின் 2-வது அலைவேகமாக பரவி வருவதை தொடர்ந்து,மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சலூன் கடைகள் மற்றும் அழகுநிலையங்களை நேற்று (ஏப்.26) முதல்மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட சிகைஅலங்காரத் தொழிலாளர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் திருநெல்வேலிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்றுதிரண்டு வந்தனர். பின்னர், சங்கத்தின் மாவட்டத் தலைவர் சண்முக வேல்முருகன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அதில், “கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடு விதிகளில் சலூன்கடைகள் அடைக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. கடந்த ஆண்டு கரோனா பரவல் ஏற்பட்டபோது சலூன் கடைகள் அடைக்கப்பட்டதால் 6 மாத காலமாக முடி திருத்தும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

வாழ்வாதாரத்தை இழந்து பசி, பட்டினியோடு சிரமப்பட்டனர். சிலர் தற்கொலைசெய்துகொண்ட நிகழ்வுகளும் நடந்தது.நிவாரண உதவியாக அரசால் அறிவிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாயும் சிலருக்கு மட்டுமே கிடைத்தது.

பெரும்பாலான தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி கிடைக்கவில்லை. அந்தபொருளாதார பின்னடைவில் இருந்துஇன்னும் மீண்டு வர முடியாத சூழலில்மீண்டும் சலூன் கடைகளை அடைக்கஅறிவிப்பு செய்திருப்பது பேரதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. எனவே, இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து, எங்கள் வாழ்வாதாரத்துக்கு சலூன் கடைகளைத் திறக்க அரசுக்குபரிந்துரை செய்ய வேண்டும். நோய்த் தொற்று பரவாத வகையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து பணி செய்வோம் என்று உறுதியளிக்கிறோம். நேரக் கட்டுப்பாடுகள் விதித்தாவது சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் முடி திருத்தும் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டிமற்றும் காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து சலூன் கடைகளும் நேற்று மூடப்பட்டன.

தமிழ்நாடு முடிதிருத்தும் அழகுகலை தொழிலாளர் நலச்சங்கம் மற்றும் அனைத்துஅமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கத்தினர், அதன் மாவட்டத் தலைவர் எம்.இசக்கிமுத்து, செயலாளர் எம்.எஸ்.விஜயகுமார், பொருளாளர் எம்.பி.பாண்டியன் ஆகியோர் தலைமையில் நேற்று ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் அளித்த மனு விவரம்:

கடந்த ஆண்டு கரோனா காரணமாக 4 மாதங்கள் கடைகளை அடைத்தோம். கடுமையாக பாதிக்கப்பட்டோம். தற்போது,மீண்டும் சலூன் கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுக்கடைகள் திறந்துவியாபாரம் நடக்கிறது.பேருந்துகளில்மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே,கட்டுப்பாடுகளுடன், சிறிது நேரத்தைகுறைத்து சலூன் கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிமறுக்கும்பட்சத்தில் ஒவ்வொரு சலூன்கடைக்காரர்களுக்கும், அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் தலா ரூ.15 ஆயிரம் கரோனா நிவாரண நிதியாகவழங்க வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி

இதுபோல், கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்துக்கு மருத்துவர் முடிதிருத்துவோர் தொழிலாளர் சங்க தலைவர் குருசாமி, செயலாளர் மாரிமுத்து, மாநில துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வந்தனர். அவர்கள் சலூன் கடைகளைதிறக்க வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர். பின்னர், நகராட்சி ஆணையர் ஓ.ராஜாராமிடம் மனு வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x