Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM

மக்காச்சோளம் கொள்முதல் செய்து ரூ.15 லட்சம் மோசடி : மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு புகார் மனு அளிக்க வந்த மேலக்கரந்தை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகேயுள்ள மேலக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்த 41 விவசாயிகளிடம், மக்காச்சோளம் கொள்முதல் செய்து ரூ.15 லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

மேலக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்த 41 விவசாயிகளும் கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்துஅளித்த மனு விவரம்: மேலக்கரந்தை கிராமத்தில் இந்த ஆண்டுமக்காச்சோளம் மகசூல் போதுமானதாக இல்லை. ஏக்கருக்கு 25 மூட்டைமக்காச்சோளம் கிடைக்கும் இடத்தில் தொடர் மழை காரணமாகவும், அமெரிக்க படைப்புழுத் தாக்குதல் காரணமாகவும் இந்த ஆண்டு 1 முதல் 6 மூட்டைகள் தான் கிடைத்துள்ளன.

இக்கிராமத்தில் 41 விவசாயிகளிடம் இருந்து, குவிண்டாலுக்கு ரூ.1,550 என, ரூ.15 லட்சத்துக்கு விருதுநகர் மாவட்டம் திருமலாபுரம் அருகேயுள்ள அகரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் மக்காச்சோளம் கொள்முதல் செய்தார். அவர் கொடுத்த காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பிவிட்டன. தற்போது, பணம் தர மறுக்கிறார். விருதுநகர் மாவட்ட காவல் துறையிலும், தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளோம். ஆனால், அவர் மீது எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயி களுக்கு சேர வேண்டிய பணம் கிடைக்கவும், மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x