Published : 23 Apr 2021 03:16 AM
Last Updated : 23 Apr 2021 03:16 AM
மக்கள் கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாநகராட்சி பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தூத்துக்குடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி பகுதி முழுவதும் ஆணையர் சரண்யா அறி உத்தரவின் பேரில், நகர்நல அலுவலர் வித்யா மேற்பார்வையில் கரோனா தடுப்புநடவடிக்கைகளை மாநகராட்சிபணியாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மாநகராட்சி பகுதியில் தினமும் சுமார் 10 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் கரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், மாநகராட்சி பகுதியில் கரோனா தடுப்பூசி போடும்பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில், நெறிமுறைகளை மீறுவோருக்கு அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. வணிக நிறுவனங்கள், கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
மக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையங்கள், சந்தைகள், கடைவீதிகள் போன்ற இடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த, 4 மண்டலங்களுக்கும் தலா 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று, `அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வந்தால் கைகளை அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பேருந்துகளில் அமர்ந்து செல்லும் அளவுக்கு மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும். நின்று கொண்டு யாரும் பயணிக்கக் கூடாது. இந்த விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும்’ என, ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடுகின்றனர்.
மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் வீடுகளை நுண் பாதுகாப்பு மையமாக அறிவிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் யாருக்காவது கரோனா தொற்று கண்டறியப்பட்டால் அந்த வீட்டுக்கு வெளியே மாநகராட்சி சார்பில் மக்களுக்கு தெரியும் வகையில் டேப் கட்டப்படுகிறது. வீட்டை விட்டு வெளியே யாரும் வரக்கூடாது என அறிவுறுத்துகின்றனர். வீட்டில் இருப்பவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை மாநகராட்சி குழுவினரே வாங்கி கொடுக்கின்றனர். இவ்வாறு கரோனா தொற்று பரவலை தடுக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர்.
காய்ச்சல் முகாம்
கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் கரோனா பரவல்தடுப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது. மருத்துவர் கார்த்திக் பரிசோதனைகள் செய்தார். கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. வடக்கு திட்டங்குளத்துக்கு உட்பட்ட ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT