Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM
உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை என வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு வழிகாட்டுதலின்படி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தேவையான அளவு உரங்கள் இருப்பு வைக்கப் பட்டுள்ளதாகவும் வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை காவேரிப்பட்டணம் வட்டாரத்தில் உள்ள உரக்கடைகளில் வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் ஆய்வு மேற்கொண்டார். அனைத்து வட்டாரங்களிலும் ஆய்வு சரியான முறையில் நடைபெறுகிறதா என கண்காணித்து, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) சுரேஷ்குமார் ஆய்வினை தொடங்கி வைத்தார்.
இதில், உரங்கள் அதன் பையில் உள்ள சில்லரை விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது எனவும், அவ்வாறு விற்பனை செய்தால் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தனர்.
மேலும் விவசாயிகளுக்கு சரியான விலையில் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், தவறு செய்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும், சிறப்பு கண்காணிப்பு குழு 10 வட்டாரத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேளாண்துறை அதிகாரிகள் மேற்பார்வை யிட்டனர். ஆய்வின்போது, உர விற்பனை, இருப்பு கிடங்கு உரிமம், விற்பனை ரசீது, ஆன்லைன் உர இருப்பு விவரம், புத்தக இருப்பு, விற்பனை விலை, தகவல் பலகை, விவசாயிகளின் ஆதார் எண் மூலம் உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தனர்.
விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணுடன் உரக்கடைக்கு சென்று மானிய விலையில் உரங்களை பெறலாம் எனவும், உரிய ரசீது பெற்று பயனடையவும் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை அலுவலர்கள் பிரியா, சத்தீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT