Published : 20 Apr 2021 03:15 AM
Last Updated : 20 Apr 2021 03:15 AM
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், தமிழகத்தில் இன்று (ஏப்.20) முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த கரோனா தடுப்பு ஊரடங்கு நெறிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக, தூத்துக்குடி நகர வணிகர்களுக்கான ஆலோசனை நேற்று நடைபெற்றது. தூத்துக்குடி ராஜ் மஹால் மண்டபத்தில் வைத்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பேசியதாவது:
கரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று முதல் இரவு 10 மணிமுதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி மற்றும் பலசரக்குகடைகள் உட்பட அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் அனைத்தும் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. அதேநேரத்தில், அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும்அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறைச் சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவை அனுமதிக்கப்படும்.
அத்தியவாசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதியளிக்கப்படும். முழு ஊரடங்கு உட்பட அனைத்து நாட்களிலும் திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்வதில் எந்த விதமான தடையுமில்லை. கடற்கரைகள், பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியவற்றுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், திரையங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகளும் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. இந்த நெறிமுறைகளை அனைத்து வணிகர்களும் முறையாக கடைபிடித்து கரோனா தொற்று பரவலை தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேலும், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை முகக்கவசம் அணிவதற்கும், சமூக இடைவெளி கடைபிடிப்பதற்கும், சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தவும் வலியுறுத்த வேண்டும். கடைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து சுத்தமாக வைத்துகொள்ளுங்கள் என்றார் எஸ்பி.
நகர டிஎஸ்பி கணேஷ் முன்னிலை வகித்தார். மத்திய பாகம் காவல் ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி, உதவி ஆய்வாளர் முருகபெருமாள், தூத்துக்குடி நகர மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் பாஸ்கரன், வணிகர் சங்க மாநில துணைத்தலைவர் பொன் தினகரன், மாநில இளைஞரணி அமைப்பாளர் ராஜா, பர்னிச்சர் உரிமையாளர்கள் சங்க தலைவர் தர்மராஜ், பலசரக்கு கடைகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் துரைராஜ், ஜவுளி ரெடிமேட் வியாபாரிகள் சங்க தலைவர் தெய்வநாயகம் உள்ளிட்ட அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT