Published : 16 Apr 2021 03:12 AM
Last Updated : 16 Apr 2021 03:12 AM
செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் நோயாளிகள் வசதிக் காக ரூ.6 லட்சத்தில் பேட்டரி கார் ஒன்றை தனியார் நிறுவனம் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு பேட்டரி கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு வரும் வயதான நோயாளிகள், வார்டுகளில் தங்கி சிகிச்சைபெறுவோர், அறுவை சிகிச்சைக்குப்பிறகு எழுந்து நடக்க முடியாதவர்கள் ஆகியோர், ரத்தப் பரி சோதனை, ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே மையங்களுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இவர்களை மருத்துவமனை ஊழியர்கள் சக்கர நாற்காலி மற்றும் சிறிய சக்கரங்கள் பொருத்திய படுக்கைகளில் மட்டுமே பரிசோதனைகளுக்கு அழைத்து சென்றனர். இதனால் நோயாளிகள் மிகுந்த சிரமத்துடன் செல்லும்நிலை இருந்தது.
இந்நிலையில். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பொது மக்கள் நலன் கருதி தனியார் நிறுவனம் ரூ.6 லட்சம் மதிப்பில், 6 பேர் அமர்ந்து செல்லக் கூடிய வகையில் புதிய பேட்டரி கார் வழங்கியுள்ளது.
இதையடுத்து, இந்த கார் முதலில் கோவிட் தடுப்பூசி செலுத்த வருவோருக்குப் பயன்படும் வகையிலும், பின்னர் அனைவருக்கும் பயன்படும் வகையிலும்இயக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த காரை வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் சேவை தொடர்ந்து இலவசமாக இயக்கப்படும். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.
‘‘இந்த கார் நோயாளிகளை அழைத்துச் செல்ல மிகவும் உதவியாக இருக்கும்’’ என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT