Published : 12 Apr 2021 03:18 AM
Last Updated : 12 Apr 2021 03:18 AM

கோவையில் ஒரே நாளில் 617 பேருக்கு கரோனா பாதிப்பு : இதுவரை 2.52 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தகவல்

கோவை/ திருப்பூர்

கோவை மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 617 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

கோவையில் நூறுக்கு கீழ் இருந்து வந்த புதிதாக கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, கடந்த மார்ச் 17-ம் தேதி 100-ஐ கடந்தது. அதைத்தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் கோவையில் 617 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறையினர் கூறியதாவது: சென்னை, செங்கல்பட்டுக்கு அடுத்தபடியாக கோவையில்தான் கரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதற்கு பொது இடங்களில் மக்கள் முகக்கசவம் அணியாததும், சமூக இடைவெளியை பின்பற்றாததுமே காரணம். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 78 அரசு மையங்களிலும், 102 தனியார் மையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை, கோவை மாவட்டத்தில் மொத்தம் 2.52 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை, சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐமருத்துவமனை, 17 தனியார் மருத்துவமனைகள், மத்தம்பாளையத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையம் ஆகிய இடங்களில் கரோனா பாதித்த 2,665 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற ஏதுவாக 5,127 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. கோவை அரசுமருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 22 இடங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்தம்பாளையத்தில் உள்ள காருண்யா சிறப்பு மையத்தில் 240 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல, பாரதியார் பல்கலைக்கழகத்தில் அமைக்கப் பட்டுள்ள சிகிச்சை மையத்தில் 17 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.கோவை மாநகராட்சி பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று102 பேருக்கு மொத்தம் ரூ.20,400அபராதம் விதிக்கப்பட்டது"என்றனர்.

திருப்பூரில் 177 பேருக்கு தொற்று

சுகாதாரத் துறையினர் கூறும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 20,639-ஆக உள்ளது. இதில் 19,304 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக 1,106 பேர் திருப்பூர் மற்றும் கோவை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை முடிந்து நேற்று 77 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 229 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 177 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் கரோனா நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x