Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட் டத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி, வில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் ஆகிய 7 தொகுதிகளிலும் 149 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாவட்டத்தில் 968 மையங்களில் 2,370 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதோடு, மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளாகக் கண்டறியப்பட்ட 157 வாக்குச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தேர்தல் பணியில் மொத்தம் 9,480 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு தொடங்கியது. நகர், ஊரகப் பகுதிகளில் ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். கல்லூரி மாணவிகள், மாணவர்கள் பலர் தங்களது முதல் வாக்கைச் செலுத்த ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்தனர்.
வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தப்படுத்தப்பட்ட பிறகு வாக்காளர்களுக்கு கையுறைகளும் வழங்கப்பட்டன. பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன் காத்திருந்து வாக்களித்தனர்.
மாவட்ட ஆட்சியர்இரா.கண்ணன் கூரைக்குண்டு ஊராட்சியில் உள்ள அரசு பள்ளி வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வாக்களித்தார். அமைச்சரும் ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி திருத்தங்கல் கலைமகள் மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னாள் அமைச்சரும் அருப்புக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளருமான சாத்தூர் ராமச்சந்திரன் கோபாலபுரத்திலும், முன்னாள் அமைச்சரும், திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளருமான தங்கம் தென்னரசு மல்லாங்கிணரில் வாக்கை செலுத்தினார்.
விருதுநகர் தொகுதி திமுக வேட்பாளர் சீனிவாசன் விருதுநகர் அருகே உள்ள அழகாபுரியிலும், பாஜக வேட்பாளர் பாண்டுரங்கன் தனது குடும்பத்தினருடன் சென்று சூலக்கரையிலும் வாக்கைச் செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT