Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM

தூத்துக்குடி ராஜீவ் நகரில் - பட்டா கோரி தேர்தல் புறக்கணிப்பு : பேச்சுவார்த்தைக்குப் பின் மாலையில் சமாதானம்

தூத்துக்குடியில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ராஜீவ் நகர் மக்கள்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தாங்கள் குடியிருக்கும் நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரி ராஜீவ் நகர் மக்கள் 1,340 பேர் நேற்று தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து 9 மணி நேரம் கழித்து மாலை 4 மணி முதல் வாக்களிக்க தொடங்கினர்.

தூத்துக்குடி ராஜீவ் நகர் 1-வது தெரு முதல் 10-வது தெரு வரை 250 வீடுகள் உள்ளன. இவர்கள் சார் பதிவாளர் அலுவலகத்தில் முறையாக பத்திரப்பதிவு செய்து அந்த இடங்களில் வீடு கட்டியுள்ளனர். கடந்த 1997-ம் ஆண்டு முதல் 13 ஆண்டுகளாக மீளவிட்டான் ஊராட்சியிலும், 2010 முதல் கடந்த 10 ஆண்டுகளாக தூத்துக்குடி மாநநகராட்சியிலும் வீட்டுத் தீர்வை, மின்கட்டணம், தண்ணீர் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் முறையாக செலுத்தி வருகின்றனர். மேலும், இடங்களும் முறையாக திட்ட அனுமதி பெறப்பட்டவை.

ஆனால், இந்த இடங்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமானது எனக் கூறி, பட்டாவழங்காமல் கடந்த 20 ஆண்டுகளாக காலம் கடத்தி வருகின்றனர். குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் பட்டா வழங்க மறுத்து வருகின்றனர். இதனை கண்டித்தும், தங்களுக்கு பட்டா வழங்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உடனடியாக தடையில்லா சான்று வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், ராஜீவ்நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ரமேஷ்குமார், செயலாளர் எட்வின் ராஜா ஆகியோர் தலைமையில், அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பகுதியில் உள்ள 1,340 வாக்காளர்களும் வாக்களிக்காமல் அந்த பகுதியில் திரண்டு போராடினர். நேற்று மதியம் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். மாலை 4 மணியளவில் தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் பாண்டியராஜ் ஆகியோர், அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வரும் 9-ம் தேதி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி, தடையில்லா சான்று வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனதமிழ்நாடு வீட்டுவசதி வாரியசெயற்பொறியாளர் பாண்டியராஜ் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு, மாலை 4 மணிக்குமேல் வாக்களிக்கத் தொடங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x