Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றிமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
மாவட்டத்தில் உள்ள 2,097 வாக்குச்சாவடிகளிலும் காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சற்று தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. தூத்துக்குடி அருகே தருவைகுளம் புனித மிக்கேல் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இரண்டு வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயங்காததால், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவில்லை.
மண்டலக் குழுவினர் வந்து இயந்திரங்களை சரி செய்தனர். ஒரு வாக்குச்சாவடியில் 7.30 மணிக்கும், மற்றொரு வாக்குச்சாவடியில் 9.15 மணிக்கும் வாக்குப்பதிவு தொடங்கியது. உடன்குடி கிறிஸ்டியா நகரம் டிடிடிஏ பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் இயங்காததால், புதிய இயந்திரம் மாற்றப்பட்டு காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வைகுண்டம் தொகுதி சாத்தான்குளம் அருகே ஞானியார்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சாத்தான்குளம் ஆர்.சி.பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 30 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
இதுதவிர மாவட்டத்தில் வேறுஎந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.
திருச்செந்தூர், ஆறுமுகநேரி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் நேற்று காலையில் லேசான சாரல்மழை பெய்தது. இதன் காரணமாகவெயிலின் தாக்கம் சற்று குறைந்துகாணப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலானோர் தபால் வாக்களிக்கவில்லை. நேற்று வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர். அவர்களுக்கு சற்கர நாற்காலிகளும், அவற்றை இயக்க தன்னார்வலர்களும் இருந்தனர்.
வாக்களிக்க வந்த அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. வலதுகைக்கு மட்டும் பாலித்தீன் கையுறைகள் வழங்கப்பட்டன. இவற்றைவழங்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 2 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக 302 பதற்றமான மற்றும்5 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். 1,050 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு முழுவதும் ஆன்லைனில் நேரடியாக கண்காணிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கூறும்போது, மாதிரி வாக்குப்பதிவின் போது சரியாக செயல்படாத12 கட்டுப்பாட்டு அலகுகள், 15 வாக்குச்சீட்டு அலகுகள் மற்றும்26 விவிபேட் கருவிகள் மாற்றப்பட்டு புதிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. வாக்குப்பதிவின் போது செயல்படாத ஒரு கட்டுப்பாட்டு அலகு, ஒரு வாக்குச்சீட்டு அலகு மற்றும் 13 விவிபாட் கருவிகள் மாற்றப்பட்டு புதிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டன என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT