Published : 02 Apr 2021 03:14 AM
Last Updated : 02 Apr 2021 03:14 AM

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி - சங்கு குளிக்கும் மீனவர்கள் கடலுக்கு அடியில் விழிப்புணர்வு : தூத்துக்குடியில் குறும்படம் வெளியீடு

தூத்துக்குடியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சங்கு குளிக்கும் மீனவர்கள் கடலுக்கு அடியில் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி. படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சங்கு குளிக்கும் மீனவர்கள் ஆழ்கடலில் கடலுக்கு அடியில் மேற்கொண்ட விழிப்புணர்வு குறும்படத்தை மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருசில வாக்காளர்கள் ஓட்டு போடுவதில் ஆர்வம் காட்டாமல் ஜனநாயக கடமையாற்ற தவறுகிறார்கள். எனவே, வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் சங்குகுளிக்கும் மீனவர்கள் மூலம்கடலுக்கு அடியில் நடத்தப்பட்டவிழிப்புணர்வு நிகழ்ச்சி குறும்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

முத்துக்குளித்தலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தகுறும்படத்தை எல்இடி வாகனங்கள் மூலம் ஒளிபரப்புவதோடு, வலைதளங்கள், வாட்ஸ் அப் மூலம் வாக்காளர்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் உயரும் என்றார் ஆட்சியர்.

நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், துணை ஆட்சியர் (பயிற்சி) சதீஷ்குமார், மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், தூத்துக்குடி சங்கு குளிக்கும் மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x