Published : 30 Mar 2021 03:16 AM
Last Updated : 30 Mar 2021 03:16 AM
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், சேலத்தில் வீடுகளில் பொதுமக்கள் முடங்கி யுள்ளதால், வெறிச்சோடிய வீதிகளில் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் வீதி வீதியாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தினமும் தங்கள் கட்சித் தொண்டர்கள் புடை சூழ கட்சி கொடியை கையில் ஏந்தி, துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.கோடை காலம் தொடங்கிய நிலையில், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால், பொதுமக்கள் பலரும் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரதான சாலை, வர்த்தக பகுதிகளில் உள்ள வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், சாலையில் செல்லும் மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். வேட்பாளர்கள் வீதிகளுக்குள் செல்லும் போது, கோடை வெயிலால் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.இதனால், பல வீதிகளில் வெறிச்சோடிய நிலையில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கச் சென்று ஏமாற்றத்துடனும், சோர்வுடனும் திரும்பும் நிலையுள்ளது.
இதனால், பல வேட்பாளர்கள் மாலை மற்றும் இரவு நேரத்தில் தங்கள் கட்சியினருடன் வீதிகளில் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர். பகல் நேரங்களில் வாகனங்களில் சென்று வாக்கு சேகரிப்பதை பார்க்க முடிகிறது.
இன்னும் சில வேட்பாளர்கள் கோடை வெயில் தாக்கம் சவாலாக இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் கொளுத்தும் வெயிலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT