Published : 30 Mar 2021 03:17 AM
Last Updated : 30 Mar 2021 03:17 AM
தூத்துக்குடி/ நாகர்கோவில்/ கோவில்பட்டி
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ரேண்டம்முறையில் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டன. பின்னர்அந்தந்த தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதிக்கான இயந்திரங்கள் மட்டும் தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
தொடர்ந்து வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ரேண்டம் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டுகளை பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது.
அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் இந்த பணியை மண்டலதேர்தல் குழுவினர் மேற்கொண்டனர். மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் மொத்தம் 2,097 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு கட்டுப்பாட்டு அலகு என மொத்தம் 2,097 கட்டுப்பாட்டு அலகுகள் தேவை. உபரியாக 20 சதவீதம் என மொத்தம் 2,518 கட்டுப்பாட்டு அலகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
விளாத்திகுளம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய 2 தொகுதிகளில் 15 வேட்பாளர்கள் இருப்பதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு வாக்குச்சீட்டு அலகு போதுமானது. தூத்துக்குடி, வைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 4 தொகுதிகளிலும் 15 வேட்பாளர்களுக்கு மேல் உள்ளதால் வாக்குச்சாவடியில் தலா 2 வாக்குச்சீட்டு அலகுகள் வைக்கவேண்டியுள்ளது. 6 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 4,254 வாக்குச்சீட்டு அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோல் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபாட் இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஆகியவற்றை பதிவு செய்யும் பணியும் நேற்று நடைபெற்றது. 6 தொகுதிகளிலும் மொத்தம் 2,600 விவிபேட் இயந்திரங்களில் இப்பணிகள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றன.
இதை மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆய்வு செய்தார். தூத்துக்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், துணை ஆட்சியர் (பயிற்சி) சதீஷ்குமார், தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின் ஆகியோர் உடனிருந்தனர்.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,243 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 274 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறிப்பட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யும்பணி கடந்த 6-ம் தேதி நடைபெற்றது.வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் ஒட்டும் பணி நேற்று தொடங்கியது. நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்குச்சாவடிகளுக்கு அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், விளவங்கோடுக்கு மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், கிள்ளியூருக்கு தேவிகோடு அரசு நடுநிலைப்பள்ளியிலும் இப்பணி நடைபெற்றுவருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் ஆய்வு செய்தார்.
கண்பார்வையற்றவர்களுக்கு வாக்களிப்பதற்கு வசதியாக பிரெய்லி முறையில் தயார் செய்யப்பட்டுள்ள வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பேப்பர் ஒட்டும் பணியையும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, கோட்டாட்சியர் மயில், உதவி ஆட்சியர்(பயிற்சி) ரிஷாப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கோவில்பட்டி
இதுபோல் கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. இப்பணிகளை தேர்தல் பார்வையாளர் அஸ்வின் குமார் சவுதாரி பார்வையிட்டார். தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் அமுதா, ராஜ்குமார், சூரியகலா, முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT