Published : 29 Mar 2021 03:16 AM
Last Updated : 29 Mar 2021 03:16 AM
சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, தி.மு.க எம்.பி. ஆ.ராசா முதல்வர் பழனிசாமியை அவதூறாக பேசியதை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, சேலம் அஸ்தம்பட்டியில் அதிமுக-வினர், ஆ.ராசாவின் உருவப்பொம்மை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் எம்பி பன்னீர்செல்வம், அதிமுக பகுதிச் செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆ.ராசாவின் உருவப்பொம்மையை எரித்தும், ஆ.ராசாவுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த அஸ்தம்பட்டி போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதேபோல, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் அண்ணாதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே, ஆ.ராசாவை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம், கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. தென்னரசு, ஈரோடு கிழக்குத்தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் எம்.யுவராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதைப்போல் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் பகுதி செயலாளர்கள் கே.சி.பழனிச்சாமி, பெரியார் நகர் மனோகரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆ.ராசாவை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.
திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் நகரச் செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் முருகேசன் உள்பட கட்சி நிர்வாகி கள் பலர் கலந்து கொண்டனர்.
குமாரபாளையம் - பள்ளி பாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக நகரச் செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட இடங்களில் அதிமுக மற்றும் பாமக கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அவதூறாகவும், அநாகரிகமாகவும் பேசிய ஆ.ராசா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நிர்வாகிகள் பலரும் பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT