Published : 29 Mar 2021 03:16 AM
Last Updated : 29 Mar 2021 03:16 AM
சேலம் சீலநாயக்கன்பட்டியில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினர்.
கூட்டத்தில், விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
மத்தியில் ஆளும் பாஜகவிடம் தமிழகத்தை அதிமுக அடமானம் வைத்து விட்டதால், வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றம் காண வேண்டும். தமிழகத்தில் மோசமான ஆட்சியையும், கொள்கையையும் முன் வைத்து அதிமுக ஆட்சி செய்து வருகிறது.
அதிமுக தேர்தலுக்காக சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது. பிற்போக்கு சக்திகள் தமிழ் மண்ணை பாழ்படுத்தி வருகிறது. சாதி, மத, இனம், மொழியால் மக்களை பிளவுப்படுத்தும் சக்திகளை இத்தேர்தலில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் பேசியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. புதிய வேளாண் சட்டம், நீட் தேர்வு, புதிய தொழிலாளர் சட்டம், சிஐஏ என மக்களுக்கு எதிரான விரோத நடவடிக்கையை எடுத்து தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வரும் அதிமுக, பாஜக கூட்டணியை இத்தேர்தலில் மக்கள் தோற்கடித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றியடைச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:
முதல்வர் பழனிசாமி மீண்டும் முதல்வராக வாய்ப்பு கேட்டு மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார். அவரால் எதிர் கட்சித் தலைவராக அமர கூட இடம் கிடைக்காத நிலையே இத்தேர்தலில் ஏற்படும். விவசாயியின் நண்பன் என்று கூறிக்கொள்ளும் முதல்வர் பழனிசாமி, நாடாளுமன்றத்தில் புதிய வேளாண் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விட்டு, தற்போது, தேர்தல் அறிக்கையில் வேளாண் சட்டத்தை எதிர்ப்போம் என கபட நாடகமாடி வருகிறார்.
சிஐஏ சட்டம் நிறைவேற முதல்வர் பழனிசாமி ஆதரவு அளித்து விட்டு, சிறுபான்மையினரின் நலனை பாதுகாப்போம் என்பது எவ்வாறு நியாயமாகும். தமிழகத்தை இருண்ட காடாக மாற்றியுள்ள அதிமுக அரசை இத்தேர்தல் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT