Published : 26 Mar 2021 03:16 AM
Last Updated : 26 Mar 2021 03:16 AM
தொகரப்பள்ளி மயிலாடும் பாறையில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கீழடி, கொந்தகை, அகரம், கங்கை கொண்ட சோழபுரம், கொற்கை, மயிலாடும்பாறை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மணலூர் என 10 இடங்களில் தற்போது அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளி அருகில் உள்ள மயிலாடும்பாறையில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு தொடங்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில், மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குநர் சக்திவேல், தொல்லியல் அகழாய்வு அலுவலர்கள் பரந்தாமன், வெங்கடகுரு பிரசன்னா மற்றும் சென்னை எம்.ஏ., ஆர்க்கியாலஜி மாணவ, மாணவியர் கீர்த்தனா, சித்தார்த்தினி, தேவேந்திரன், ஜான் ஜூவான் ஆகியோர் இதில் பங்கேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக அகழாய்வு இயக்குநர் சக்திவேல் கூறியதாவது: இங்குள்ள மலையில் புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மலையின் கீழ், 30-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இவற்றைக் கண்டுபிடித்து சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்த ஒரு மாதம் கடந்துள்ளது. தற்போது முறையான அகழாய்வு தொடங்கப்பட்டுள்ளது. அதில், முன்னோர்கள் இங்கு எந்த மாதிரியான வாழ்வியல் முறைகளை மேற்கொண்டனர். உலக அளவில் உள்ள பல்வேறு இனக்குழுக்களில் இவர்கள் எந்த இனக்குழுவை சேர்ந்தவர்கள் என்பதை இங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு டிஎன்ஏ சோதனை செய்து கண்டுபிடிக்கப்பட உள்ளது. முறையாக வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் ஆய்வு மேற்கொள்ளப்படும். மயிலாடும்பாறையில் குறைந்தது 5 ஆண்டுகள் அகழாய்வு மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது என்றார்.
இதனிடையே கிழக்கு தொடர்ச்சி மலையில் தொல் பழங்கால மக்கள் வாழ்ந்த தடயங்களை ஆய்வு செய்து வரும், சர்மா பவுண்டேஷன் பொறுப்பாளர் சாந்தி பாப்பு தலைமையில் ஆராய்ச்சி மாணவர்கள் நேற்று இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள், பாறை எப்படி உருவானது, அவற்றின் வயது எத்தனை என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT