Published : 26 Mar 2021 03:16 AM
Last Updated : 26 Mar 2021 03:16 AM
நாகரசம்பட்டி பகுதியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் நாகரசம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கம்புகாலப்பட்டி, செல்லம்பட்டி, காட்டுக்கொல்லை, நாகரசம்பட்டி, வால்பாறை, வீரமலை, மல்லிக்கல் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் 10-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் இறந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று என்.தட்டக்கல் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில், உதவி இயக்குநர் அருள்ராஜ், வேலம்பட்டி கால்நடை மருத்துவர் கணேசன் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தனர். இதில், என்.தட்டக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளை அழைத்து வந்து பரிசோதனை செய்து கொண்டனர்.
கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறியதாவது:
கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. குறிப்பாக கோமாரியால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளை, கண்காணித்து மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.
விவசாயிகள் விழிப் புணர்வுடன் இருக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீக்கப்பட்ட பிறகு கோமாரி நோய்களுக்கான தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.
இந்நிகழ்வின் போது கேஆர்பிஅணை இடதுபுறக் கால்வாய் நீட்டிப்பு பயன்பெறுவோர் சங்கத் தலைவர்சிவகுரு, விவசாயிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT