Published : 26 Mar 2021 03:17 AM
Last Updated : 26 Mar 2021 03:17 AM

மாற்றுத்திறனாளிகள், முதியோர் எளிதாக வாக்களிக்க - 889 சக்கர நாற்காலிகள் தயார் : தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் எளிதாக வாக்குச்சாவடிக்கு வர உதவும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள சக்கர நாற்காலிகளை தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டார். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் கள் எளிதாக வாக்குச்சாவடிக்கு வரஉதவும் வகையில் 889 சக்கர நாற்காலிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதாகவாக்குச்சாவடிக்கு வர உதவும்வகையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சக்கர நாற்காலி வசதி செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 889 வாக்குச்சாவடி மையங்களுக்கும் சக்கர நாற்காலிகள் வாங்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுலகத்துக்கு கொண்டு வரப்பட்டன.

இவற்றை 6 சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ்ஒப்படைத்தார்.

தூத்துக்குடி தொகுதிக்கான சக்கர நாற்காலிகளை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் பெற்றுக் கொண்டார். பின்னர் ஆட்சியர் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சேர்த்து 889 மையங்களில் மொத்தம் 2,097 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தேவையான சாய்வுதள வசதி, சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறன் வாக்காளர்களை அழைத்துச் செல்ல ஒரு தன்னார்வலரும் நியமிக்கப்படவுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் பிடபிள்யூடி செயலி மூலம் தாங்கள் வாக்களிக்க வரும் நேரத்தை பதிவுசெய்தால் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்டமாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், தூத்துக்குடி வாட்டாட்சியர் ஜஸ்டின் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x