Published : 24 Mar 2021 03:15 AM
Last Updated : 24 Mar 2021 03:15 AM
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை திமுக வேட்பாளர் தமிழரசி திருப்புவனம் அருகே சேற்றில் இறங்கி நாற்று நட்டு வாக்கு சேகரித்தார்.
மானாமதுரை தொகுதியில் அதிமுக சார்பில் எம்எல்ஏ நாகராஜனும், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தமிழரசியும், அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ மாரியப்பன் கென்னடியும் போட்டியிடுகின்றனர். தொடர்ந்து 4 முறை வென்ற அதிமுகவிடம் இருந்து மானாமதுரையை கைப் பற்ற திமுக கடும் முயற்சி செய்து வருகிறது.
இதற்காக வாக்காளர்களை கவரும்விதமாக தமிழரசி வித்தி யாசமான முறைகளில் வாக்கு சேகரித்து வருகிறார். கடை வீதி களில் செல்லும்போது புரோட்டா, ஃபிரைடு ரைஸ், டீ தயாரிப்பது, குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்லும்போது கூடை பின்னுவது என மக்களோடு மக்களாக இணைந்து வாக்குகளைச் சேக ரித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அவர் திருப்புவனம் ஒன்றியம் தட்டான்குளம், கழுகேர்கடை, மணலூர், அகரம், அகரம் காலனி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மணலூரில் வாக்குச் சேகரிக்க சென்றபோது அப்பகுதி பெண்கள் நாற்று நடவு செய்து கொண்டிருந்தனர். இதைப் பார்த்த தமிழரசி திடீரென காரை விட்டு சேற்றில் இறங்கி பெண்களோடு நாற்று நடவுப் பணியில் ஈடுபட்டார். மேலும் அவர்களோடு சேர்ந்து குலவையும் இட்டார்.
பிறகு அவர்களிடம் வாக்கு சேகரித்தார்.15 நிமிடங்கள் வரை நாற்று நடவு செய்த அவருக்கு, திமுகவினர் சேற்றில் இறங்கி நாற்று முடிச்சுகளை எடுத்து கொடுத்து உதவி செய்தனர். தமிழரசியின் செய்கையைப் பார்த்து பெண்கள் வியப்படைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT