Published : 22 Mar 2021 03:14 AM
Last Updated : 22 Mar 2021 03:14 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் சேர்த்து காவல்துறை பார்வையா ளராக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி சப்யா சச்சி ராமன் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்துக்கு மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
மாவட்டத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு குறித்தும், பிணையில் விடமுடியாத பிடியாணைகள், துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்தது, முன்னெச் சரிக்கை யாக பாதுகாப்பை பலப்படுத்த பதிவு செய்யப்பட்ட வழக்குகள், மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 12 சோதனைச் சாவடிகளில் வாகன தணிக்கை, துணை ராணுப்படையினரின் பணிகள் மற்றும் அவர்களின் தேவைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
“மாவட்டத்தில் பராமரிக்கப்பட்டு வரும் குற்றப்பதிவேட்டில் இடம்பெற்றுள்ள 1,523 ரவுடிகள் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 107, 109 மற்றும் 110-ன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நேரத்தில் பிரச்சினையில் ஈடுபடக்கூடியவர்கள் என 313 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற 536 துப்பாக்கி களில் விலக்கு அளிக்கப்பட்ட 84 துப்பாக்கிகள் தவிர அனைத்து துப்பாக்கிகளும் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த ஆண்டு ஜனவரி முதல் இன்று வரை 42 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்” என, எஸ்பி ஜெயக்குமார் எடுத்துரைத்தார். 6 தொகுதிகளிலும் காவல் துறை கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் ஏடிஎஸ்பிக்கள் கோபி, கார்த்திகேயன், இளங் கோவன், திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ் சிங், டிஎஸ்பிகள் மற்றும் துணை ராணுவப் படை அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT