Published : 21 Mar 2021 03:16 AM
Last Updated : 21 Mar 2021 03:16 AM

தமிழகத்தில் 28 சதவீதமாக இருந்த குழந்தை தொழிலாளர்கள் - கரோனாவுக்கு பின்னர் 79 சதவீதமாக அதிகரிப்பு : கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்

சேலம்

தமிழகத்தில் 28.2 சதவீதமாக இருந்த குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை கரோனாவுக்கு பின்னர் 79.6 சதவீதமாக அதிகரித்துள்ளது என குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சாரம் என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

சேலத்தில் குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சாரம் என்ற அமைப்பு சார்பில் நேற்று குழந்தைத் தொழிலாளர்கள் தொடர்பான கணக்கெடுப்பின் ஆய்வறிக்கை வெளியிடும் கூட்டம் நடந்தது. அமைப்பின் சேலம் மாவட்ட அமைப்பாளர் அலமேலு வரவேற்றார். மாநில அமைப்பாளர் கருப்பசாமி, ஒருங்கிணைப்பாளர் குருசாமி ஆகியோர் ஆய்வறிக்கையை வெளியிட, வழக்கறிஞர்கள் திவ்யா, இந்துமதி, ராஜாத்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இதுதொடர்பாக மாநில அமைப்பாளர் கருப்பசாமி கூறியதாவது:

கடந்த செப்டம்பர் முதல் நவம்பர் வரை தமிழகத்தில் 24 மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டன. கரோனா தொற்றுக்கு முன்னர் 28.2 சதவீதமாக இருந்த குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, தொற்றுக்குப் பின்னர் 79.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால், தேனி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரிப்பு சதவீதம் குறைவாக உள்ளது.

இதில், 30.8 சதவீதம் குழந்தைகள் உற்பத்தித் துறையிலும், 26.4 சதவீதம் குழந்தைகள் சேவைத் துறையிலும் பணிபுரிகின்றனர். 3-வதாக விவசாயத் துறையிலும் அதிக குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

குழந்தைத் தொழிலாளர்கள் 4 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை பணிபுரிகின்றனர். குழந்தைத் தொழிலாளர்களில் 94 சதவீதம் பேர் பொருளாதார நெருக்கடி காரணமாக, பணிபுரிவதாகக் கூறுகின்றனர்.

குழந்தைத் தொழிலாளர்களில் 81 சதவீதம் பேர் மீண்டும் பள்ளிக்கு செல்வோம் என்று கூறியுள்ளனர். 14 சதவீதம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டோம் என்றும் 5 சதவீதம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது தொடர்பாக முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். கரோனா கால 4 மாத முழு அடைப்பு, பெரும்பான்மையான ஏழைக் குடும்பங்களில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது. முழு அடைப்பு தளர்த்தப்பட்ட பின்னரும், பல குடும்பங்களுக்கு முன்னர்போல வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

வேலைவாய்ப்பின்மை சூழலைக் கருத்தில் கொண்டு, அரசு அனைவருக்கும் குறைந்தபட்ச வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஏழை குடும்பங்களுக்கு கண்ணியமான வாழ்க்கை உறுதி செய்யப்படும் வகையில், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். தொழிலாளர் சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். இதுதொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற தேர்தலில் வெற்றிபெறும் மக்கள் பிரதிநிதிகளிடமும் வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேட்டியின்போது, மாவட்ட அமைப்பாளர்கள் செல்வகுமார் (ஈரோடு), பழனிசாமி (கோவை), ஸ்டாலின் (கிருஷ்ணகிரி), ரெனிட சரளா (நாமக்கல்), கிருஷ்ணன் (நீலகிரி) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x