Published : 20 Mar 2021 03:15 AM
Last Updated : 20 Mar 2021 03:15 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 59 பேர் வேட்பு மனுத்தாக்கல் :

ஜோலார்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் தேவராஜ் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமியிடம் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

திருப்பத்தூர்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுக, திமுக, அமமுக, சமத்துவ மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் என 59 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். கடந்த 12-ம் தேதி தொடங்கி நேற்று வரை 113 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில், 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கடந்த 12-ம் தேதி முதல் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வந்தனர். நேற்று முன்தினம் வரை 4 தொகுதிகளில் 54 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 19 (நேற்று) என்பதால், அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக அளவில் மனுத்தாக்கல் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. காலை 11 மணிக்கு தொடங்கிய மனுத் தாக்கல் பிற்பகல் 3 மணியளவில் முடிவடைந்தது.

ஒவ்வொரு தொகுதியிலும் 3 மணிக்கு முன்பாக வந்த வேட்பாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்ற வேட்பாளர்கள் இரவு 7 மணி வரை மனுத்தாக்கல் செய்ய காத்திருந்தனர்.

திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக வேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக 2 பேர், பாமக வேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக ஒருவர், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாற்று வேட்பாளர் ஒருவர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 18 பேர் தேர்தல் நடத்தும் அலுவலர் வந்தனாகர்க்கிடம் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.

ஜோலார்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் தேவராஜ் தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமியிடம் நேற்று தாக்கல் செய்தார். இதற்காக, அவர் தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் பிரபு மற்றும் நிர்வாகிகளுடன் மேளதாளம் முழுங்க ஊர்வலமாக வந்தார். அவருக்கு மாற்றாக முன்னாள் எம்எல்ஏ சூரியகுமார் மனு தாக்கல் செய்தார். அதேபோல, மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, அகில இந்திய உழவர்கள், உழைப்பாளர்கள் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஆம்பூர் தொகுதியில் திமுகவேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக 2 பேர், அதிமுக சார்பில் மாற்று வேட்பாளர் ஒருவர், அனைத்து மக்கள் புரட்சி கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 12 பேர் தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

வாணியம்பாடி தொகுதியில் அதிமுகவுக்கு மாற்று வேட்பாளராக 2 பேரும், திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக 5 பேர், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 20 பேர் நேற்று ஒரே நாளில் தேர்தல் நடத்தும் அலுவலர் காயத்ரிசுப்பிரமணியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நேற்று முன்தினம் வரை 54 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், கடைசி நாளான நேற்று ஒரே நாளில் மட்டும் 4 தொகுதிகளிலும் 59 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 113 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற மார்ச் 22-ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. வரும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவுற்ற நிலையில் தேர்தல்பிரச்சாரம் சூடுபிடிக்கத்தொடங்கி யுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு தேர்தலில் களம் இறங்க உள்ள வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x