Published : 18 Mar 2021 03:14 AM
Last Updated : 18 Mar 2021 03:14 AM
கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் பனிப்பொழிவு மற்றும் வெயிலின் தாக்கத்தால், மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, காவேரிப் பட்டணம், அவதானப்பட்டி, நாட்டாண்மைக்கொட்டாய், மலை யாண்டஅள்ளி, வேலம்பட்டி, போச்சம்பள்ளி, மத்தூர் உட்பட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பூக்கள் சாகுபடி மேற்கொள்ளப் பட்டுள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் மல்லிகை பூக்கள், சரக்கு வாகனங்களில் பெங்களூரு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
தற்போது காலை 8 மணி வரை பனிப்பொழிவும், 9 மணிக்குப் பிறகு வெயிலின் தாக்கமும் அதிகமாக இருப்பதால் மல்லிகை விளைச்சல் குறைந்துள்ளதுடன், பூக்களுக்கான விலையும் குறைவாக கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக நாட்டாண்மை கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த மலர் விவசாயி ராமகிருஷ்ணன் கூறும்போது, ‘‘வழக்கமாக மார்ச் மாத தொடக்கம் முதல் மல்லிகை பூக்களின் விளைச்சல் அதிகரித்து காணப்படும்.
நிகழாண்டில் பனிப் பொழிவின் தாக்கம் காலை 8 மணி வரை உள்ளதால், பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. செடிகளில் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
காலை 9 மணிக்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரித்தவுடன் செடிகளில் உள்ள பூக்கள் அனைத்தும் மலர்ந்துவிடுகின்றன. அதிகாலை முதல் காலை 8 மணி வரை பறிக்கப்படும் பூக்கள் கிலோ ரூ.600-க்கும் மேல் கொள்முதல் செய்கின்றனர். 9 மணிக்கு பிறகு பறிக்கப்படும் பூக்கள் விலை படிப்படியாக குறைந்து 12 மணியளவில் கிலோ ரூ.350-க்கு கொள்முதல் செய்கின்றனர்.
பூச்சித்தாக்குதலை கட்டுப் படுத்த மருந்து தெளிப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்கு அதிகளவில் செலவு ஏற்படுகிறது. பனியின் தாக்கம் குறைந்தவுடன் பூக்கள் விளைச்சல் அதிகரிக்கும்,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT