Published : 17 Mar 2021 03:16 AM
Last Updated : 17 Mar 2021 03:16 AM

தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்பவர்கள் - முகக்கவசம் அணியாவிட்டால் வேட்பாளருக்கு அபராதம் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தமிழகத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் நிலையில் தூத்துக்குடியில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் மக்கள் பயணித்தனர். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை தினசரி 5-க்குள் தான் இருக்கிறது. இருப்பினும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் பொது இடங்களில்முகக்கவசம் அணியாமல் சென்ற 235 பேருக்கு ரூ.50,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 11,161 பேருக்கு ரூ.23,89,700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வரும் நாட்களில் தீவிரப்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் 20 அரசுமருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களிலும், 30-க்கும் மேற்பட்டதனியார் மருத்துவமனைகளிலும் கரோனாதடுப்பூசி போடப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் பணியாற்றவுள்ள 6,000 பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். அனைவருக்கும் வாக்குப்பதிவுக்கு முன்னால் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சானிடைஸர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

திருமண மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள்முகக்கவசம் அணியாவிட்டால் மண்டபஉரிமையாளருக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்லும் தனி நபருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.

அரசியல் கட்சிகளின் பிரச்சார பொதுக்கூட்டங்கள் மற்றும் இதர கூட்டங்களில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாகமுகக்கவசம் அணிய வேண்டும். இதுதொடர்பாக தேர்தல் கண்காணிப்புக்குழுவினர் சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இக்கூட்டங்களில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணியாவிட்டால் வேட்பாளர் அல்லது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x