Published : 17 Mar 2021 03:16 AM
Last Updated : 17 Mar 2021 03:16 AM

வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த - முகக்கவசம் அணியாதவர்களிடம் இன்று முதல் அபராதம் : மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முகக்கவசம் அணியாவிட்டால் இன்று முதல் அபராதம் விதிப்பதுடன் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்து ஓட்டுநர் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் வரை குறைந்து கொண்டு வந்த கரோனா தொற்று மார்ச் மாதத்தில் மீண்டும் வேகம் எடுத்து பரவத் தொடங்கி இருக்கிறது. பிப்ரவரி மாதம் மட்டும் 228 கரோனா தொற்றாளர்கள் மட்டுமே இருந்த நிலையில், மார்ச் மாதம் 15-ம் தேதிக்குள் 167 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

உயிரிழந்தவர்களின் விகிதம் அதிகம்

பிப்ரவரி மாதம் 0.5 சதவீதமாக இருந்த தொற்று விகிதம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அது 0.9 சதவீதமாகவும் இரண்டாம் வாரத்தில் 1.1 சதவீதகமாகவும் உயர்ந்துள்ளது. இந்த குறிப்பிட்ட நாட்களில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். மாநிலத்திலேயே கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விகிதம் அதிகம் உள்ள மாவட்டங்களில் வேலூர் மாவட்டமும் உள்ளது. கரோனா மீண்டும் வேகமாக பரவுவதற்கு பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதே காரணமாக இருக்கிறது.

இது தொடர்பாக வேலூர் மாவட்டஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்-16) முதல் இருசக்கர வாகனத்திலோ அல்லது நான்கு சக்கர வாகனத்திலோ பயணம் செய்பவர்கள் தொடர்ந்து இருமுறை முக்கவசம் அணியாமல் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களது வாகனம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது ஓட்டுநர் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். முகக்கவசம் அணியாவிட்டால் ஒவ்வொரு நபருக்கும் ரூ.200, இரு சக்கர வாகனத்தில் வருவோருக்கு ரூ.250, நான்கு சக்கர வாகனத்தில் வருவோருக்கு ரூ.500 குறைந்தபட்ச அபராதத் தொகையாக வசூலிக்கப்படும்.

பரிசோதனை கட்டாயம்

சளி, காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் அந்தப் பகுதியில் நடைபெறும் காய்ச்சல் முகாமில் அல்லது அரசு மருத்துவமனைகளில் அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x