Published : 16 Mar 2021 03:15 AM
Last Updated : 16 Mar 2021 03:15 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நேற்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உட்பட 14 பேர்வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 16 பேர்வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் யாரும்மனு தாக்கல் செய்யவில்லை. 2-வதுநாளான நேற்று காலை கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிஅதிமுக வேட்பாளர் கடம்பூர்செ.ராஜு கோட்டாட்சியர் அலுவலகம் சென்று கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கரநாராயணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். மனுவில், ரூ.32,18,661 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.15,00,000 மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மாற்று வேட்பாளராக அமைச்சரின் மனைவி இந்திராகாந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.
இத் தொகுதியில் அமமுக வேட்பாளர் தினகரனையும் சேர்த்து மொத்தம் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஓட்டப்பிடாரம்
விளாத்திகுளம்
விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் போ.சின்னப்பன் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல்நடத்தும் அலுவலர் அபுல் காசிமிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். மனுவில், ரூ.90,08,000 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.1,94,00,000 மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மாற்று வேட்பாளராக அவரது உறவினர் சரவணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.இதுபோல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி ராமச்சந்திரன் மற்றும் இருவரையும் சேர்த்து மொத்தம் 4 பேர் இத்தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வைகுண்டம்
வைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜீவரேகாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தெற்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் திருப்பாற்கடல் உடனிருந்தார். வைகுண்டம் தொகுதியில் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட பணிக்கநாடார் குடியிருப்பை சேர்ந்த சிவனேஸ்வரன் (32) என்பவர், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் கலோனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
6 தொகுதிகளிலும் நேற்று மொத்தம் 14 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். ஏற்கெனவே முதல் நாளில் வேட்புமனுத் தாக்கல் செய்த 2 சுயேச்சைகளையும் சேர்த்துஇதுவரை மொத்தம் 16 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
திருச்செந்தூர் தொகுதி அதிமுகவேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் நாளை (மார்ச் 17) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். இதுபோல் திமுக, காங்கிரஸ், தமாகா உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
‘வழக்கை சந்திப்பேன்’ :அமைச்சர்
அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கோவில்பட்டி தொகுதியில் அனைவரும் டெபாசிட் இழக்கக் கூடிய அளவுக்கு சிறப்பான முறையில் வெற்றிபெறுவேன்.
மக்களுக்கு எது இல்லையோ அதை வழங்க வேண்டியது நல்ல அரசின் கடமை. மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதை எப்படி இலவசம் என்று கூற முடியும். அதிமுக 100 சதவீதம் வெற்றி பெற்று விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக குறை சொல்கின்றனர். என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை நான் சந்திப்பேன்.
3-வது முறையாக வெற்றி பெற்றால், கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்குவேன். தொழிற்பூங்கா அமைப்பேன். கேரள மாநிலம் பம்பை - வைப்பாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவேன். இதன் மூலம் கோவில்பட்டியை வளம்கொழிக்கும் பூமியாக பெறும் நிலையை உருவாக்குவேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT