Published : 16 Mar 2021 03:15 AM
Last Updated : 16 Mar 2021 03:15 AM

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் - ஒரே நாளில் 13 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் :

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஆற்காடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமேகலையிடம் மனுத்தாக்கல் செய்த பாமக வேட்பாளர் கே.எல்.இளவழகன். அடுத்த படங்கள்: ராணிப்பேட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இளம்பகவத்திடம் மனுத்தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார். சோளிங்கர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதியிடம் மனுத்தாக்கல் செய்த அமமுக வேட்பாளர் என்.ஜி.பார்த்திபன். சோளிங்கர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதியிடம் மனுத்தாக்கல் செய்த பாமக வேட்பாளர் கிருஷ்ணன். கடைசிப்படம்: அரக்கோணம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவதாஸிடம் வேட்புமனுத்தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் சு.ரவி.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிமுக, திமுக மற்றும் பாமக, அமமுக என 13 வேட்பாளர்கள் நேற்று தாக்கல் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மனுத்தாக்கல் செய்ய அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட வேட்பாளர்கள் ஆர்வம் காட்டினர். அரக்கோணம் தனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சு.ரவி ஊர்வலமாகச் சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் சிவதாஸிடம் மனுத்தாக்கல் செய்தார். அதேபோல், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சுதாகர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிராமி ஆகியோர் என 3 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

சோளிங்கர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக வேட்பாளர் ம.கிருஷ்ணன், தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதியிடம் நேற்று மனுத்தாக்கல் செய்தார். அமமுக வேட்பாளர் என்.ஜி.பார்த்திபன் நேற்று அவரது பெயரில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக இவரது தந்தையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.கோபால் மனுத்தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாவேந்தன் மனுத்தாக்கல் செய்தார். நேற்று 4 வேட்பாளர்கள் 5 மனுக்களை தாக்கல் செய்தனர்.

ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட திமுக வேட்பாளர் ஆர்.காந்தி ஊர்வலமாகச் சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் இளம்பகவத்திடம் மனுத்தாக்கல் செய்தார். அவருடன், முன்னாள் மத்திய இணை அமைச்சரும் தற்போதைய அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் இருந்தார். அதிமுகவேட்பாளர் எஸ்.எம்.சுகுமார், மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான், முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி சி.ஏழுமலையுடன் சென்று மனுத்தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் சைலஜா, சுயேட்சை வேட்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட 4 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

ஆற்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இளவழகன், தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமேகலையிடம் நேற்று இரண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்தார். சுயேட்சை வேட்பாளராக சண்முகம் மனுத்தாக்கல் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x