Published : 10 Mar 2021 03:12 AM
Last Updated : 10 Mar 2021 03:12 AM
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த நெருப்புக்குட்டை பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சக்கரவர்த்தி (30). இவரது மனைவியிடம், அதே ஊரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் விஜயகுமார் (32) என்பவர் தவறாக நடக்க முயற்சி செய்தார்.
இதனையறிந்த சக்கரவர்த்தி கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதி விஜயகுமாரை கண்டித்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கத்தியால் குத்தினர்.
இதில் காயம் அடைந்த விஜயகுமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் சக்கரவர்த்தியை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
நேற்று இவ்வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில், விஜயகுமாரை கொலை செய்யும் நோக்கில் கத்தியால் குத்திய சக்கரவர்த்திக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் கட்டத் தவறினால், கூடுதலாக மேலும் 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT