Published : 14 Feb 2021 03:19 AM
Last Updated : 14 Feb 2021 03:19 AM

கிராமப்புற இளைஞர்களுக்கு 16-ம் தேதி சிசிடிவி பொருத்துதல் உட்பட பல்வேறு திறன் பயிற்சி முகாம்

சேலம்

சேலம் மாவட்டத்தில் 3 இடங்களில் கிராமப்புற இளைஞர்கள், பெண்களுக்கு உணவு மற்றும் குளிர்பானம் தயாரித்தல், சிசிடிவி கேமரா பொருத்துதல் உள்பட பல்வேறு வகையான தொழில்திறன் பயிற்சி 16-ம் தேதி வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் திறன் பயிற்சிக்கான பெருவாரியான அணி திரட்டல் மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 16-ம் தேதி, மாவட்டத்தின் 3 இடங்களில் தொழிற்திறன் பயிற்சி மேளா நடைபெற உள்ளது.

3 இடங்களில் பயிற்சி

பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் மேளாவில், சேலம், ஓமலூர், மேச்சேரி, கொளத்தூர், நங்கவள்ளி, தாரமங்கலம், காடையாம்பட்டி, வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, எடப்பாடி வட்டாரங்களைச் சார்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

ஏவிஎஸ். பொறியியல் கல்லூரி யில் நடைபெறும் மேளாவில், அயோத்தியாப்பட்டணம், சங்ககிரி, ஏற்காடு, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி வட்டாரங்களைச் சார்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.

பாரதியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் மேளாவில் வாழப்பாடி, பெத்தநாயக்கன் பாளையம், ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் வட்டாரங்களைச் சார்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.

சில்லறை விற்பனை மேலாண்மை, உணவு மற்றும் குளிர்பானம் தயாரித்தல், கணக்கியல் உதவியாளர், நர்சிங் பயிற்சிகள், ஆய்வக உதவியாளர், பொது உதவியாளர், தையல் இயந்திர பயிற்சி, செக்யூரிட்டி பயிற்சிகள், டேலி பயிற்சி, அழகு கலை பயிற்சி, மருந்தக உதவியாளர், ஆட்டோ மொபைல் சர்வீஸ், வங்கி மற்றும் நிதி தொடர்பான சேவைகள், இளநிலை மென்பொருள் டெவலப்பர், பொறியியல் பயிற்சி, சிசிடிவி கேமரா பொருத்துதல், வெல்டிங் டெக்னீசியன், சூரிய தகடு பொருத்துதல், பொருட்கள் மற்றும் சேவை வரி, கணக்கியல் நிர்வாகி மற்றும் பொருட்கள் மற்றும் சேவை வரி உள்ளிட்டவற்றில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

தகுதிகள்

8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி முதல் பட்டப்படிப்பு வரை பயின்ற, 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்கள் மட்டும் மேளாவில் பங்கேற்கலாம். மூன்று மாதம் முதல் 6 மாதங்கள் வரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் காலை 16-ம் தேதி காலை 9 மணிக்கு தொழிற்திறன் பயிற்சி மேளாவில் கலந்து கொள்ளலாம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x