Published : 05 Feb 2021 03:16 AM
Last Updated : 05 Feb 2021 03:16 AM
ஏற்காட்டில் கோடை விழா மலர்க் கண்காட்சிக்காக தோட்டக்கலைப் பூங்காவில் ரோஜா உள்ளிட்ட மலர்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஏழைகளின் ஊட்டி என புகழப்படும் ஏற்காடு சுற்றுலா தலத்தில், ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா மலர்க் கண்காட்சி நடத்தப்படும். கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக, கண்காட்சி நடத்தப்படவில்லை.
தற்போது, கரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. எனவே, நடப்பாண்டு கோடைவிழா மலர்க்கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மலர்க் கண்காட்சிக்காக முன்னேற்பாடு பணிகளில் தோட்டக்கலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஏற்காடு கோடை விழாவில் மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர்ச்செடிகளை இப்போதே நடவு செய்யத் தொடங்கியுள்ளோம். அண்ணா பூங்காவில் பால்சம், ஜீனியா, சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர், மேரிகோல்டு, சூரியகாந்தி ஆகிய மலர் விதைகள் 25 ஆயிரம் முதல்கட்டமாக விதைக்கப்பட்டுள்ளன.
ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா கட்டிங்ஸ் 3 ஆயிரம் எண்ணிக்கைக்கு மேல் மேட்டுப்பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ரோஜா பூங்கா, அண்ணா பூங்கா, முதலாவது அரசு தாவரவியல் பூங்கா ஆகியவற்றில் 675 வகையான ரோஜா செடிகள் என மொத்தம் 6,750 எண்ணிக்கை நடவு செய்யப்பட்டு வருகிறது.
ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால் தற்போது, ஏற்காட்டில் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.
இதன் காரணமாக, தோட்டங்களில் வைத்துள்ள பூச்செடிகள் செழித்து வளரத் தொடங்கியுள்ளன.
எனவே, கோடை விழா தொடங்கும்போது நடவு செய்யப்பட்டுள்ள பூச்செடிகள் முழுமையாக வளர்ச்சியடைந்து, பூத்துக் குலுங்கி, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT