Published : 26 Jan 2021 03:19 AM
Last Updated : 26 Jan 2021 03:19 AM

தேசிய வாக்காளர் தின விழா: விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

தூத்துக்குடியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. படம் என்.ராஜேஷ்

தூத்துக்குடி/கோவில்பட்டி/நாகர்கோவில்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் நேற்று விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்கா முன் சைக்கிள் பேரணியை மாவட்டஆட்சியர் கி.செந்தில் ராஜ் தொடங்கிவைத்து, தானும் பங்கேற்றார். மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் கலோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரோச் பூங்காவில் பேரணி நிறைவடைந்தது. அங்கு வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, காமராஜ் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழாநடைபெற்றது. ஆட்சியர் தலைமைவகித்தார். இளம் வாக்காளர்களுக்கு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளை ஆட்சியர்வழங்கினார். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.

வட்டாட்சியர் ஜஸ்டின், காமராஜ் கல்லூரி முதல்வர் து.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உறுதிமொழி ஏற்பு

இதேபோன்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாவில், எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தலைமையில் காவல் துறையினர், அமைச்சுப் பணியாளர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கோவில்பட்டி

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் வாகன பிரச்சார பயணம் நேற்று தொடங்கப்பட்டது. கோட்டாட்சியர் விஜயா தொடங்கி வைத்தார். வட்டாட்சியர் மணிகண்டன், தேர்தல் துணை வட்டாட்சியர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் நாகலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்

அனைவரும் கட்டாயம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என, கன்னியாகுமரி ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்தார்.

தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சிநாகர்கோவில் தெதி இந்து கல்லூரியில் நடைபெற்றது. ஆட்சியர் மா.அரவிந்த் தலைமை வகித்தார்.

அவர் பேசும்போது, “வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காகவே தேசிய வாக்காளர் தினம்கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

இம்மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் புதிதாக 54,518 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் இணையதளம் வாயிலாக தங்களின் பெயரை சேர்த்துக்கொள்ளலாம். ஜனநாயகஉரிமையை நிலைநாட்டும் வகையில் அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்றார்.

புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலைஅலுவலர்கள், மாவட்ட அளவிலானஆன்லைன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர், ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்கள், சுய உதவி குழுக்களுக்கிடையே நடந்த கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தேர்தல் விழிப்புணர்வு தோல்பாவை கூத்து நடை பெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்றஅனைவரும் தேசிய வாக்காளர்தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

எஸ்.பி. பத்ரிநாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) மெர்சி ரம்யா கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x