Published : 10 Jan 2021 03:30 AM
Last Updated : 10 Jan 2021 03:30 AM

ரூ.380 கோடியில் நடைபெறும் விரிவாக்கப் பணி தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆய்வு

தூத்துக்குடி

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் பொறியியல் பிரிவு நிர்வாக இயக்குநர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணி ரூ.380 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதில், 1,350 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் கொண்ட தற்போதைய விமான ஓடுதளம், 3,115 மீட்டர் நீளம், 45 மீட்டர் அகலம்கொண்டதாக தரம் உயர்த்தப்படுகிறது. மேலும், ஒரே நேரத்தில்600 பயணிகள் வந்து செல்லும் வகையில் வசதியான உள்ளூர் விமான முனையமும் அமைக்கப்படுகிறது.

இப்பணிகளை ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் பொறியியல் பிரிவு நிர்வாகஇயக்குநர் சஞ்சீவ் ஜின்டால் தூத்துக்குடி வந்தார்.

விமான ஓடுதளம், விமானம் நிறுத்தும் இடம், பயணிகள் முனையம், சிக்னல்மையம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பகுதிகளை அவர் ஆய்வு செய்தார். அப்போது, விமான நிலையத்துக்கு பிரத்யேகமாக 22/33 கே.வி திறன் கொண்ட, இருமின் இணைப்புகள் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

பின்னர், விமான நிலைய வளாகத்தில் ரூ.28 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொறியியல் பிரிவு திட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் விமானநிலைய ஆணைய பொதுமேலாளர்கள் பிரேம் பிரசாத்(எலக்ட்ரிக்கல்), ஏ.எஸ்.மகேஷா(சிவில்), இணை பொதுமேலாளர்கள் ஏ.ராதாகிருஷ்ணன் (சிவில்),வி.எஸ்.கிருஷ்ணன் (எலக்ட்ரிக்கல்), தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் என்.சுப்பிரமணியன், நிலைய மேலாளர் ஜெயராமன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் குழு கூட்டம்

தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம், அதன் தலைவரான தூத்துக்குடி எம்பி கனிமொழி தலைமையில் காணொலியில் நடைபெற்றது. குழுவின் மாற்றுத் தலைவர் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், விமான நிலைய இயக்குநர் என்.சுப்பிரமணியன், தொழில் வர்த்தக சங்கத்தினர், விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடந்த 2020-ம் ஆண்டில் கரோனா ஊரடங்கு காரணமாக தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பயணிகள் வருகை 42.24 சதவீதமும், விமானங்களின் எண்ணிக்கை 37.79 சதவீதமும் குறைந்திருந்ததாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தூத்துக்குடியில் இருந்து கொச்சி, கோவை, மும்பை, ஹைதராபாத், டெல்லி போன்ற இடங்களுக்கு விமான சேவையை தொடங்க வேண்டியதன் அவசியம்குறித்தும், சரக்கு போக்குவரத்து தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

வல்லநாடுமலையில் சூரியசக்தி மூலம் இயங்கும் சிக்னல் விளக்கு பொருத்த, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதியை பெறுவதற்கு உதவி செய்த கனிமொழி எம்பிக்கு, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x