Published : 25 Dec 2020 03:17 AM
Last Updated : 25 Dec 2020 03:17 AM
கலப்பட கருப்பட்டி தயாரிப்பு மற்றும் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என நேற்று விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில், உடன்குடி பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நேற்றுகாணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவாறு பங்கேற்றனர்.
12 வட்டார வேளாண்மை அலுவலகங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் குறைகள், பிரச்சினைகளை காணொலி காட்சி வாயிலாக எடுத்துரைத்தனர். அவற்றுக்கு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளித்தனர். கூட்டத்தை தொடங்கி வைத்து ஆட்சியர் பேசியதாவது:
பயிர் சேதம்
அதுபோல புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் உடனடியாக கணக்கெடுத்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வேளாண் பயிர்களை பொறுத்தவரை 510.86 ஹெக்டேர் அளவுக்கு சேதமடைந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும்.1,296.62 ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்ததால் ரூ.1.07 கோடி அளவுக்கு இழப்புஏற்பட்டுள்ளது.
கலப்பட கருப்பட்டி
உடன்குடி விவசாயி சந்திரசேகரன் பேசும்போது, ‘‘கலப்பட கருப்பட்டி விற்பனையை தடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால்,அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உணவு பாதுகாப்புத் துறையினரே கலப்பட கருப்பட்டி தயாரிக்க அனுமதி அளித்துள்ளனர். இதனை தடுக்க வேண்டும்’’ என்றார்.உடன்குடியை சேர்ந்த விவசாயி திருநாகரன் மற்றும் ஒரு வழக்கறிஞரும் இதே கருத்தை வலியுறுத்தினர். உலகளவில் புகழ்பெற்ற உடன்குடி கருப்பட்டி தற்போது கலப்படத்தால் சீரழிந்து கிடக்கிறது. கலப்பட கருப்பட்டியால் உடன்குடியின் பெயருக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது. உடல்நலத்துக்கும் கேடு ஏற்படுகிறது. எனவே, கலப்பட கருப்பட்டி விற்பனையை தடுத்துநிறுத்த வேண்டும் என்றனர். இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுடன் கலந்து பேசி விரைவில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார்.
வெள்ளநீர் கால்வாய் திட்டம்
சாத்தான்குளத்தைச் சேர்ந்த மகா.பால்துரை பேசும்போது, ‘‘கருமேனி ஆற்றில் சாத்தான்குளம் பகுதியில் நீர்தேக்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமிரபரணி, நம்பியாறு, கருமேணி ஆறு இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டத்தில் மணப்பாடு வரையிலான குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.
பயிர்கள் சேதம்
தூத்துக்குடி உப்பாறு ஓடை மீட்புக் குழுவைச் சேர்ந்த ஜோதிமணி பேசும்போது, ‘‘தூத்துக்குடி அருகேயுள்ள கீழத்தட்டப்பாறை, மேலத்தட்டப்பாறை, உமரிக்கோட்டை, அல்லிகுளம் பகுதியில்தனியார் எண்ணெய் சுத்திகரிப்புஆலை அமைக்க சுமார் 3,000 ஏக்கர்நிலம் கையகப்படுத்தப்படவுள்ளதாக தெரிகிறது. இதனால் இப்பகுதி கடுமையாக பாதிக்கப்படும். விவசாயிகள் வாழ்வாதாரம் இழப்பார்கள். உப்பாறு ஓடை போன்ற நீர்நிலைகள் அழிந்து போகும். எனவே, தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை இப்பகுதியில் அமைக்கக்கூடாது’’ என வலியுறுத்தினர்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட வேளாண்மைஇணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT