Published : 17 Dec 2020 03:18 AM
Last Updated : 17 Dec 2020 03:18 AM

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள நகருக்குள் வனம் திட்ட மரக்கன்றுகளை பராமரிக்க அழைப்பு

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நகருக்குள் வனம் திட்டத்தில் நடவு செய்யப்படுள்ள மரக்கன்றுகளை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பார்வையிட்டார்.

சேலம்

சேலம் மாநகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நகருக்குள் வனம் திட்டத்தில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை தன்னார்வலர்கள் பராமரிக்க மாநகராட்சி ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.

சுற்றுப்புற சூழலை பேணிகாக்கும் வகையில் சேலம் மாநகராட்சி சார்பில் கொண்டலாம்பட்டி மண்டலம் சீலநாயக்கன்பட்டி நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மைய வளாகத்தில் வனத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் ‘நகருக்குள் வனம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகருக்குள் வனத்தில் அதிக அளவில் மரங்களை நட இயலும். அதிக அளவில் மரங்களை நடுவதன் வாயிலாக காற்றில் உள்ள கரியமிலவாயுவை கட்டுபடுத்தி வாயுமண்டலத்தில் ஆக்ஸிஜனை அதிக படுத்துவதோடு காற்று மாசு கட்டுபடுத்தவும் இயலும்.

இதன் அடிப்படையில், சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மைய வளாகம், தாதம்பட்டி ஆட்டோ காலனி, வீராணம் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மைய வளாகம், போடிநாயக்கன்பட்டி ஏரி பகுதி, இஸ்மாயில்கான் ஏரி பகுதி, காக்காயன்காடு நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மைய வளாகம் ஆகிய இடங்களில் 56,300 சதுரஅடியில் மரகன்றுகள் நடப்பட்டு பாதுகாத்து வளர்க்கப்பட்டு வருகிறது.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும் உள்ள 13 பகுதிகளில் 2,66,278 சதுரஅடி பரப்பளவில் நகருக்குள் வனங்களை கூடுதலாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் புங்கன், வேம்பு, பூவரசு, மகாகனி, நாவல், தேக்கு, இலந்தை உள்ளிட்ட மரங்கள் வளர்க்கப்படவுள்ளன.

இப்பகுதியில் உள்ள மண்ணின் தன்மை மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப நன்கு வளரக்கூடிய நாட்டு மரங்கள் நடப்படும். மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து இவ்வனங்களில் நடப்படும் மரங்களை பாதுக்காத்து பராமரித்திட தன்னார்வலர்கள் மற்றும் தொண்டுநிறுவனங்கள் முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x