Published : 11 Dec 2020 07:30 AM
Last Updated : 11 Dec 2020 07:30 AM
தங்களது மருத்துவப் படிப்பு கனவு நனவாகி விட்டதாக அரசு பள்ளியில் பயின்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகள் பெரு மிதம் தெரிவித்தனர்.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்க சட்டம் இயற்றி தமிழக அரசு இந்த ஆண்டே உத்தரவிட்டது. அதன்படி, அரசு மற்றும் சுய நிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 313 மருத்துவப் படிப்பு (எம்.பி.பி.எஸ்.) அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் 92 பல் மருத்துவப் படிப்பு (பி.டி.எஸ்.) அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 405 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உறுதி செய்யப்பட்டது. அதோடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணத்தை அரசே செலுத்தும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு ஒதுக்கீட்டில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசுப் பள்ளியில் படித்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள விருதுநகர் அருகே உள்ள முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மாணவர் ஜி.கார்த்திகேயன் கூறுகையில், எனது தந்தை குணசேகரன், தாய் அமுதா இருவரும் கூலித் தொழிலாளர்கள். முத்துராமலிங்கபுரம் அரசுப் பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வில் 381 மதிப்பெண்கள் பெற்றேன். நீட் தேர்வில் 156 மதிப்பெண்கள் பெற்றேன். 7.5 சதவீத ஒதுக்கீடு காரணமாக எனக்கு சென்னை மாதா அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. இதன்மூலம் எனது மருத்துவக் கனவு நனவாகி உள்ளது என்றார்.
நல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாணவி ராமதிலகம் கூறுகையில், எனது பெற்றோர் கூலித் தொழிலாளர்கள். நல்லமநாயக்கன்பட்டி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்தேன். நீட் தேர்வுக்காக பயிற்சிக்குச் செல்லவில்லை. வீட்டில் இருந்தே படித்தேன். 132 மதிப்பெண்கள் எடுத்தேன். எனக்கு கோவை ஆர்.வி.எஸ். மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது என்றார்.
எம்.ரெட்டியபட்டியைச் சேர்ந்த மாணவர் க.பிரவின்குமார் கூறியபோது: எனது பெற்றோர் விவசாயத் தொழி லாளர்கள். எம்.ரெட்டியபட்டி அரசு பள்ளியில் படித்து 516 மதிப்பெண் எடுத்தேன். நீட் தேர்வில் 170 மதிப்பெண் பெற்றேன். கோவை கே.எம்.சி.எச். மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். கிடைத்துள்ளது என்றார்.
இதேபோன்று, விருதுநகர் மாவட் டத்தில் அரசுப் பள்ளியில் பயின்ற கீழராஜகுலராமனைச் சேர்ந்த மாணவி சௌமியா, நடையனேரியைச் சேர்ந்த மாணவி அபர்னா, அம்மாபட்டியைச் சேர்ந்த மாணவர் சுபாஷ் பிரபாகரன், திருத்தங்கல்லைச் சேர்ந்த மாணவி கல்பனா, மல்லாங்கிணரைச் சேர்ந்த மாணவி பிரபா, மேலதாயில்பட்டியைச் சேர்ந்த மாணவர் தனபிரகாஷ், ராஜபாளையத்தைச் சேர்ந்த மாணவி திவ்யலட்சுமி, பி.ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த மாணவி மஞ்சுதேவி ஆகியோரும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT