Published : 10 Dec 2020 03:17 AM
Last Updated : 10 Dec 2020 03:17 AM
புரெவி புயலின் தாக்கத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றுநாட்களாக தொடர் மழை பெய்தது.தூத்துக்குடி மாநகர் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர்தேங்கி, மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பிரையண்ட் நகர்,சிதம்பரநகர், டூவிபுரம், அண்ணாநகர், தபால் தந்தி காலனி, ராஜீவ் நகர், கதிர்வேல் நகர், செயின் மேரீஸ் காலனி, ஸ்டேட் பாங்க் காலனி போன்ற இடங்களில் மழைநீரை வெளியேற்றுவது சிக்கலான செயலாக உள்ளது. ஊற்றுநீர் பெருக்கெடுப்பதால் தண்ணீரை வெளியேற்றுவது மாநகராட்சி ஊழியர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி டூவிபுரம் 2-வதுதெருவில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மக்களுக்கு ஆதரவாக மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். டேங்கர் லாரி மூலம் மழைநீரை உறிஞ்சி வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தபால் தந்தி காலனி, ராஜீவ் நகர், கதிர்வேல் நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி, அந்த தண்ணீரில் தூண்டில் போட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
அமைச்சர் ஆய்வு
தூத்துக்குடி நகரில் மழைநீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பார்வையிட்டார். சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் உடனிருந்தனர்.அமைச்சர் கூறும்போது, “ இயல்பை விட அதிகமான மழைபெய்யும் போது தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவது இயல்பு தான். 200-க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெறுகிறது. போராட்டங்கள் மூலம் மழைநீரை வெளியேற்ற முடியாது. ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் தான் வெளியேற்ற முடியும். ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தூத்துக்குடியில் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ரூ.73 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. 70 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. அடுத்த ஆண்டு மழை காலத்தில் இந்த பிரச்சினை இருக்காது” என்றார்.
மழை அளவு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 43, காயல்பட்டினம் 65, குலசேகரன்பட்டினம் 19, விளாத்திகுளம் 8, கோவில்பட்டி 5.5, கீழ அரசடி 1, எட்டயபுரம் 5, சாத்தான்குளம் 32.8, வைகுண்டத்தில் 5.5 மி.மீ. மழை பெய்துள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT