Published : 05 Dec 2020 03:17 AM
Last Updated : 05 Dec 2020 03:17 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் உழவர்- அலுவலர் தொடர்பு திட்டம் அறிமுகம் விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் உழவர்களுக்கும், வேளாண்மை விரிவாக்க அலுவலர்களுக்கும் உள்ள தொடர்பை வலுப்படுத்தும் விதமாகவும், வேளாண்மைத் துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு சென்று நவீன வேளாண் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் உழவர் நலன் காக்கும் மானியத் திட்டங்களை விவசாயிகள் இடையே உரிய நேரத்தில் கொண்டு சேர்க்கும் வகையிலும் 'உழவர்- அலுவலர் தொடர்பு திட்டத்தை’ தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் கிராமஊராட்சிகளில் நிரந்தர பயணத்திட்டத்தின்படி, 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் விவசாயிகள் மற்றும் உழவர் குழுக்களை சந்தித்து வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகளையும், வேளாண்துறைத் திட்டங்கள் குறித்த தகவலையும் அலுவலர்கள் வழங்குவார்கள்.

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் குறைந்த பட்சம் 10 முன்னோடி விவசாயிகளை (ஆதிதிராவிடர், பழங்குடியினர் 2 பேர்உட்பட) தேர்வு செய்து, அவர்களுக்கு பல்வேறு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் அரசு மானிய திட்டங்கள் குறித்த விளக்கங்களும், பயிற்சிகளும் உரிய இடைவெளியில் தொடர்ந்து வழங்கப்படும்.

மேலும் வயலில் தொழில் நுட்ப செயல்விளக்கங்கள் நடத்தியும், பயிற்சிகள் அளித்தும், பண்ணைப்பள்ளிகள் மூலமும், கண்டுணர்வு, சுற்றுலாக்கள் மூலமும் நவீன தொழில் நுட்பங்களையும், திட்டங்கள் செயல்பாடுகளையும் விவசாயிகளுக்கு அலுவலர்கள் தெரிவிப்பார்கள்.

பயிற்சி பெற்ற விவசாயிகள் வேளாண்மைத்துறைக்கும், விவசாயிகளுக்கும் இடையேபாலமாக இருந்து செயல்படுவார்கள்.

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஏதேனும் ஒரிடத்தில் ஒருதொடர்பு மையம் நிர்ணயம் செய்யப்பட்டு, எல்லா ஊராட்சிகளுக்கும் 2 வாரங்களில் சென்று வரும்வகையில் நிரந்தர பயணத்திட்டம் உருவாக்கப்பட்டு ஊராட்சிதோறும் முன்னதாக தெரிவிக்கப்படும்.

வாட்ஸ்அப் குழுக்கள்

வேளாண்துறை அலுவலர்கள், முன்னோடி விவசாயிகள் ஆகியோரை உள்ளடக்கிய வாட்ஸ்அப் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு, அதன்மூலமும் தொழில்நுட்ப, திட்டப்பணிகள் குறித்த கருத்து பரிமாற்றம் நடைபெறும். உழவர்- அலுவலர் தொடர்புத் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயனடைய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x