Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM
தமிழக முதல்வர் கே.பழனிசாமி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன நேரியியல் முடுக்கி கருவி மற்றும் மத்திய ஆய்வக கட்டிடம் ஆகியவற்றை நேற்று காலை தொடங்கி வைத்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ரூ.39.09 கோடி மதிப்பிலான 18 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். ரூ. 328.66 கோடி மதிப்பிலான 29 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 15,792 பயனாளிகளுக்கு ரூ.37.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
2 தொழில் பூங்காக்கள்
முதல்வர் பழனிசாமி தெரிவித்ததாவது:விளாத்திகுளம் வட்டம், வைப்பார் கிராமத்தில் தொழில் பூங்கா அமைக்க 1,019 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம்சிப்காட் நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.2,000 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். தூத்துக்குடி அல்லிக்குளம் பகுதியில் புதிய தொழில் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி அரசின் பரிசீலனையில் உள்ளது. சென்னை - கன்னியாகுமரி தொழில் பெருவழி திட்டத்தின் கீழ், திருச்செந்தூர் - பாளையங்கோட்டை வரை 50 கிலோ மீட்டருக்கு ரூ. 165 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
தொழில் முதலீடு
சென்னையில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்ஸ்பிக் நிறுவனம் ரூ.3,806 கோடி மதிப்பீட்டில் 800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உரங்கள் உற்பத்தி விரிவாக்க திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இத்திட்டம் ஏப்ரல் 2021-ல் நிறைவேறும். ஸ்பிக் கிரீன் ஸ்டார் உர நிறுவனம் ரூ.1,525 கோடியில் 720 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் கந்தக அமில ஆலையை விரிவாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த நிறுவனம் ரூ.550 கோடியில் 600 பேருக்கு வேலை கிடைக்கும் வகையிலும், பிரான்ஸ் நிறுவனம் ரூ.2,000 கோடியில் 600 பேருக்கு வேலை கிடைக்கும் வகையிலும் காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி ஆலைகளை அமைக்கின்றன.கடல் அரிப்பை தடுக்க பெரியதாழையில் ரூ.30 கோடி, கீழவைப்பாரில் ரூ. 12.20 கோடியில் தூண்டில் பாலம் விரிவாக்கம், ஆலந்தலையில் ரூ.52.60 கோடி மற்றும் வீரபாண்டியன்பட்டினத்தில் ரூ.1.20 கோடியில் கடல் அரிப்பு தடுப்பு பணி விரைவில் தொடங்கவுள்ளது.
தாமிரபரணி உபரிநீர்
தாமிரபரணி ஆற்றில் செல்லும் உபரி வெள்ளநீரை நீரேற்றம் திட்டத்தின் மூலம் உப்பாறு, மலட்டாறு, கல்லாறு, வைப்பாறு நதிகளுக்கு கொண்டு செல்லும்திட்டம் ரூ.264 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். அதன்படி, சீவலப்பேரி தடுப்பணையில் இருந்து 40 மீட்டர் உயரத்துக்கு நீரேற்றம் செய்து 12.5 கி.மீ. தொலைவில் உள்ள பூவாணி, கொசவன்குளம் பகுதிக்கு கொண்டு சென்று, அங்கிருந்து 60 கி.மீ. தொலைவுக்கு புதிய கால்வாய் அமைத்து உப்பாறு, மலட்டாறு, கல்லாறு, வைப்பாறு வரை கொண்டு சென்று முத்தலாபுரம் பகுதியில் இணைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 200 கன அடிநீர் வீதம் நீரேற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாமிரபரணி ஆற்றில் கடலில் வீணாக கலக்கும் 173 மில்லியன் கன அடி நீரை பாசனத்துக்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் வறட்சியான பகுதியில் நிலத்தடிநீர் செறிவூட்டப்பட்டு, விவசாயம் மேம்படும்.
2,000 மினி கிளினிக்
வானரமுட்டி, சிவஞானபுரத்தில் அரசுஆரம்ப சுகாதார நிலையங்கள் உடனடியாக அமைக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதிக்கும் 5 அல்லது 6 மினி கிளினிக் வீதம் 2,000 மினி கிளினிக்கள் ஒரு மாதத்தில் திறக்கப்படும். இதில் தலா ஒரு மருத்துவர், செவிலியர், பணியாளர் இருப்பார்கள். இவை மாலை நேரத்தில் செயல்படும்.
வீரமாமுனிவருக்கு மணிமண்டபம்
வீரமாமுனிவருக்கு காமநாயக்கன்பட்டி பரலோக மாதா ஆலய வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் முழு உருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்படும். கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபம் ரூ.73 லட்சம் செலவில் புனரமைக்கப்படும். குதிரையில் அமர்ந்திருப்பது போன்ற புதிய சிலை நிறுவப்படும். கயத்தாறில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், முடிவைத்தானேந்தலில் ஆவின் சார்பில் 50 ஆயிரம் லிட்டர் பால்கையாளும் திறன் கொண்ட புதிய பால்பண்ணை, தூத்துக்குடியில் ரூ. 2 கோடிமதிப்பிட்டில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் ஆகியவை அமைக்கப்படும், என்றார் முதல்வர்.கோவில்பட்டியில் முதல்வருக்கு வரவேற்பு
தூத்துக்குடியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தமிழக முதல்வர் கே.பழனிசாமி, கோவில்பட்டி வழியாக காரில் விருதுநகர் சென்றார்.
குறுக்குச்சாலை விலக்கில் முதல்வருக்கு, அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதேபோல் எட்டயபுரத்தில் அதிமுகவினர், விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில்பட்டி அருகே திட்டங்குளம் விலக்கில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பரமசிவம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க நிறுவனர் ராஜவேல், தலைவர் ஆர்.எஸ்.சுரேஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பு அமைச்சர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT