Published : 11 Nov 2020 03:18 AM
Last Updated : 11 Nov 2020 03:18 AM
தூத்துக்குடி மாநகராட்சியில் ‘கழிவுல காசு' என்ற திட்டத்தின் கீழ் குப்பையில் இருந்து கிடைத்த வருமானத்தில் 450 தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது.
தூய்மை இந்தியா திட்டம்மற்றும் திடக்கழிவு மேலாண்மைவிதிகள் 2016, தேசிய பசுமைதீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்களோடு காற்று மாசு நிறைந்த நகரங்களின் பட்டியலில் தூத்துக்குடி மாநகராட்சி இடம் பெற்றுள்ளது. இந்நிலையை மாற்றியமைக்கும் பொருட்டு, இங்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக திடக்கழிவு மேலாண்மைப் பணிகளில் குப்பைகளை மக்கும் மற்றும் மறுசுழற்சி குப்பை என பிரித்து கையாள்வதன் மூலம்இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு கழிவுகளில் இருந்து சுழல்பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான புதிய முயற்சியை தூத்துக்குடி மாநகராட்சி மேற்கொண்டது.
ஆணையர் வீ.ப.ஜெயசீலன் வழிகாட்டுதலின்படி மாநகர் நலஅலுவலர் சு.அருண்குமார் தலைமையில் பொதுசுகாதாரப் பிரிவு அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் பங்களிப்போடு ஏற்படுத்தப்பட்ட இந்த புதிய முயற்சி தான் ‘கழிவுல காசு' திட்டமாகும்.
திடக்கழிவுகளில் கலந்திருக்கும் விலைமதிப்புள்ள பொருட்கள்பணியாளர்களால் நேரடியாக பிரிக்கப்பட்டு மறுசுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதேநேரத்தில் தூக்கிஎறியப்படும் இதர மதிப்பு குறைந்த கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, மண்ணுக்கு தேவையான இயற்கை உரங்களும் வீணாகின்றன. இதனைதவிர்க்க, சுழல் பொருளாதாரத்துவத்தை திடக்கழிவு மேலாண்மையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் காகிதம், பிளாஸ்டிக், டயர்கள், துணிகள் போன்றவற்றை முறையாக பிரித்து மக்கும் குப்பைகளின் அளவையும், தரத்தையும்அதிகரிப்பதன் வாயிலாக இயற்கைவளங்கள் பாதுகாக்கப்படுவதோடு, பொருளாதார மேம்பாடும் ஏற்பட வழிவகுக்கும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
காகிதத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதால் காகிதங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவதும் அதிகரிக்கிறது. ஆனால், பயன்படுத்திய காகிதங்களில் இருந்து மாற்று காகிதப் பொருளை உருவாக்குவது சாத்தியம் என்பதோடு, உற்பத்திச் செலவும் குறைவு. இதனால் மரங்கள் வெட்டப்படுவது குறைந்து காடுகள், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும்.
இந்த தத்துவத்தை அடிப்படையாக கொண்டு வடக்கு மண்டலத்தில் சுகாதார அலுவலர் வீ.அரிகணேசனுடன் இணைந்து பொது சுகாதாரப் பிரிவு பணியாளர்கள் கடந்த ஜூன் மாதம் முதல் தங்கள்பகுதிகளில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். பொதுமக்களிடம் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தி குப்பைகளை பிரித்துவழங்கச் செய்ததோடு, பணியாளர்களும் மறுசுழற்சிக்கு ஏற்புடைய பொருட்கள் எவ்வகையிலும் நேரடியாக கழிவாக வெளியேறிவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டனர்.
இதன் மூலம் கடந்த 5 மாதகாலத்தில் 202 டன் மறுசுழற்சி கழிவுகளை மீட்டெடுத்து ரூ.4.05 லட்சத்துக்கு கூடுதலாக நிறு வனங்களுக்கு வழங்கினர்.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட தொகையை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இத்திட்டத்தில் பங்கு கொண்ட 450 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு செயல்திறன் அடிப்படையில் பிரித்து பங்குத் தொகையுடன், இனிப்பு பொட்டலங்கள் சேர்த்து வழங்கப்பட்டன. நாட்டிலேயே முதல் முறையாக ‘கழிவுல காசு’ திட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மச்சாதுநகர் நுண் உரம் செயலாக்க மையத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணையர் வீ.ப.ஜெயசீலன், பணியாளர்களுக்கு கழிவுல காசு திட்டத்தில் போனஸ் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT